வெஸ்ட் இண்டீஸ் அணியை உலகக்கோப்பை குவாலிபயர் லீக் போட்டியில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதோடு சூப்பர் சிக்ஸ் சுற்றிருக்கும் முன்னேறியுள்ளது ஜிம்பாப்வே அணி.
ஜிம்பாவே நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை குவாலிஃபயர் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ மற்றும் குரூப் பி பிரிவுகளாக தலா ஐந்து அணிகள் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடுகின்றன.
இதில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்றைய லீக் போட்டியில் மோதின. ஏற்கனவே இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றியையும் பெற்று நான்கு புள்ளிகளில் இருக்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் பெரும். மேலும் நான்கு புள்ளிகளையும் அடுத்த சுற்றுக்கு எடுத்து செல்லும்.
பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. ஓப்பனிங் இறங்கிய கம்பி மற்றும் க்ரெய்க் எர்வின் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் சேர்த்தனர். கம்பி 26 ரன்கள், எர்வின் 47 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர்.
அடுத்து வந்த சீன் வில்லியம்சன் 23 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். ஐந்தாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரியான் பர்ல் மற்றும் சிக்கந்தர் ராசா இருவரும் 87 ரன்கள் சேர்த்தனர். பர்ல்(50) அரைசதம் அடித்து அவுட் ஆனார்.
அபாரமாக விளையாடிய சிக்கந்தர் ராசா கடந்த போட்டியில் சதம் அடித்த பார்மை இங்கேயும் தொடர்ந்தார். இவர் 68 ரன்களுக்கு அவுட் ஆனார். 49.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆன ஜிம்பாப்வே அணி 268 ரன்கள் அடித்தது.
269 ரன்கள் இன்னும் இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடந்த போட்டியில் சதமடித்த ப்ரன்டன் கிங் 20 ரன்களுக்கு அவுட் ஆனார். கைல் மேயர்ஸ் தனது ஐபிஎல் பார்மை இங்கேயும் தொடர்ந்தார். இவர் 56 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய சாய் ஹோப் இப்போட்டியில் 30 ரன்கள் அடித்து சிக்கந்தர் ராசா பந்தில் அவுட் ஆனார். நிக்கோலஸ் பூரான் 34 ரன்கள், ராஸ்டன் சேஸ் 44 ரன்கள் அடித்து மிடில் ஆர்டரில் சற்று நம்பிக்கையை கொடுத்தனர்.
ஆனால் கடைசியில் வந்த வீரர்கள் எவரும் இரட்டை இழக்க ரன்களைக்கூட அடிக்கவில்லை. இதனால் 44.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி 233 ரன்கள் மட்டுமே அடித்தது. இறுதியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சிந்தித்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அத்துடன் நான்கு புள்ளிகளையும் அடுத்த சுற்றுக்கு எடுத்துச் செல்கிறது. இது உலக கோப்பைக்கு தகுதி பெறுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
பேட்டிங்கில் 68 ரன்கள் அடித்து, பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டர் ஆட்டத்தை வெளிப்படுத்திய சிக்கந்தர் ராசா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.