ரோஹித் சர்மா விராட் கோலி இல்லாமல் தலைசிறந்த டி20 அணியை தேர்வு செய்திருக்கிறார் டேனிஷ் கனேரியா.
2021 ஆம் ஆண்டு முடிவுற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், இந்த ஆண்டு டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தொகுத்து சிறந்த 11 வீரர்களை கொண்ட அணியை முன்னாள் வீரர்கள் பலர் தேர்வு செய்து வருகின்றனர்.

இந்த வரிசையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கணெரியா தனது சிறந்த டி20 அணியை தேர்வு செய்திருக்கிறார். அவரது அணியில் துவக்க வீரர்களாக பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம் மற்றும் முஹம்மது ரிஸ்வான் இருவரும் உள்ளனர். 3வது மற்றும் 4வது இடத்தில் இங்கிலாந்து அணியை சேர்ந்த ஜோஸ் பட்லர் மற்றும் லிவிங்ஸ்டன் இருவரும் இருக்கின்றனர்.
வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் இருக்கின்றனர். ஆடம் சாம்பா மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளராக இந்த அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் மற்றும் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி ஆகிய மூவரும் வேகப்பந்து வீச்சில் இடம்பெற்றுள்ளன. இந்த அணியில் 12 ஆவது வீரராக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டேனிஷ் கனேரியா தேர்வு செய்துள்ள இந்த அணியில் இந்திய அணியின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் மூவரில் ஒருவருக்குக் கூட இடம் கொடுக்கப்படவில்லை. இது குறித்து விளக்கமளித்த அவர், “மூவரும் இந்த ஆண்டில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. இந்த மூவரையும் விட ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி, நன்கு ரன்களை குவித்துள்ளார். ஆகையால் அவருக்கு முன்னுரிமை கொடுத்து அணியில் சேர்த்துள்ளேன்.” என்றார்.
மேலும், 2021 ஆம் ஆண்டு செயல்பாட்டை வைத்து மட்டுமே வீரர்கள் இந்த அணியில் எடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகையால் ரசிகர்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது விமர்சனத்தை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.