காயம் காரணமாக லிமிடெட் ஓவர் போட்டிகளில் இருந்து பாதியிலேயே விலகிய டேவிட் வார்னருக்கு மாற்று வீரரை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் பின்ச் இருவரும் களம் கண்டனர். இதில் அபாரமாக விளையாடிய வார்னர் 83 ரன்களுக்கும், பின்ச் 60 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் லபுச்சானே இருவரும் வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதில் ஸ்மித் முதல் போட்டியை போலவே இரண்டாவது போட்டியிலும் 62 பந்துகளில் சதம் விளாசினார். இவர் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 63 ரன்கள் விளாச ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்திருந்தது. லபுச்சானே 70 ரன்கள் எடுத்திருந்தார்.
இலக்கை துரத்திய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது. இதனால் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரை இழந்தது.
இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் 4வது ஓவர் வீசப்பட்டுக் கொண்டிருந்தபோது, வார்னர் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கீழே விழுந்தார். இவரை உடற்தகுதி நிபுணர் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் கைத்தாங்களாக வெளியே அழைத்து சென்றனர். அதன்பிறகு காரில் ஏறிச் சென்ற வார்னர் ஸ்கேன் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது இவரது காயம் தீவிரமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கட்டாய ஓய்வு தேவை என குறிப்பிட்டிருந்தனர். அதனால் அவர் மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடர் என இரண்டையும் ஆட முடியாது என அணி நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது. மேலும் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி துவங்கும் டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவர் குணமடைந்துவிட்டால் தொடர்ந்து ஆடலாம் இல்லை எனில் டெஸ்ட் தொடரில் இருந்தும் அவர் நீக்கப்படுவார் என தெரிவித்திருந்தது.
தற்போது லிமிடெட் ஓவர் போட்டிகளில் வார்னரின் இடத்தை நிரப்ப பிக்பாஸ் லீக் தொடரில் நன்கு விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் மற்றுமொரு துவக்க வீரர் டிஆர்கி சாட் என்பவரை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் உள்ளே எடுத்து வந்திருக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு மற்றுமொரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் லிமிடெட் ஓவர் தொடரிலிருந்து காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். அவருக்கான மாற்று வீரரை அணி நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.