ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் சொதப்பி வருவதால், அவர்களுக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார் டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் தொடரில் பங்கேற்று வரும் இங்கிலாந்து அணிக்கு இது ஒரு மறக்கக்கூடிய ஆஷஸ் தொடராக மாறியிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட இன்னிங்ஸ் தோல்வி பெறும் நிலைக்கு சென்று, கடைசியாக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தது. இரண்டாவது டெஸ்டில் இன்னும் மோசமாக, 275 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி படுதோல்வியை சந்தித்தது.
இந்த இரண்டு போட்டிகளிலும் செய்த தவறை சரிசெய்து கொள்ளாமல் அதே தவறை மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி செய்ததால், ஆஸ்திரேலிய அணியிடம் வசமாக சிக்கியது. இம்முறை இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஷஸ் தொடரையும் தக்கவைத்துக்கொண்டது ஆஸ்திரேலியா அணி.

இப்படி மோசமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் இங்கிலாந்து அணி மோசமாக செயல்பட்டதால் அதன் கேப்டன் ஜோ ரூட் மீது விமர்சனங்கள் சரமாரியாக பாய்ந்திருக்கிறது. இருப்பினும் அணி நிர்வாகம் ஜோ ரூட் மீது இன்னும் நம்பிக்கையை கொண்டிருக்கிறது. மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில், எப்படி வெல்ல வேண்டும்? என திட்டங்களும் வகுக்கப்பட்டு வருவதாக சமீபத்திய பேட்டியில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்தார்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு ஆஸ்திரேலிய மைதானங்களில் எப்படி பந்துவீச வேண்டுமென அறிவுரை கூறியிருக்கிறார் டேவிட் வார்னர். அதாவது,

“இங்கிலாந்து மைதானங்களில் விளையாடும் பொழுது கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலிய மைதானங்கள் சற்று மாறுபட்டதாய் இருக்கும். ஆஸ்திரேலியாவில் பிறந்து, ஆஸ்திரேலிய மைதானங்களில் அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவன் என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு சில அறிவுரைகளை கூறிக்கொள்கிறேன். ஆஸ்திரேலியா மைதானங்களில் இங்கிலாந்து மைதானங்களை போன்று எக்ஸ்ட்ரா பவுன்ஸ் கிடைக்காது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இதனை கருத்தில் கொண்டு பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அடிலெய்டு மற்றும் பிரிஸ்பேன் மைதானங்களில் வீசிய லேந்த் சரியாக இல்லை. அந்த லேந்தில் வீசினால் பந்து போல்டில் அடிக்காது. எனவே இன்னும் கொஞ்சம் மேலே தூக்கி வீச வேண்டும். இந்த தவறுகளை இனிவரும் இரண்டு போட்டிகளிலும் செய்யாமல் இருக்கவேண்டும். அதற்கு சிந்தெடிக் விக்கெட் முறையில் பயிற்சி செய்தால் சரியாக இருக்கும்.” என அறிவுறுத்தினார்