இந்தியாவின் முதல் சர்வதேச பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான துவக்கம் மற்றும் முடியும் என்னவென்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக ‘பிங்க்’ பந்தில் நடக்க இருக்கிறது.
தற்போது இந்தியாவில் குளிர்காலம் என்பதனால், 6 மணியளவில் இருந்தே பனிப்பொழிவு துவங்கி விடும். பனியின் காரணமாக பந்து ஈரமாகிவிட்டால் பந்துவீச்சாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள் என்பதை கருத்தில் கொண்டு நேரத்தை திட்டமிட்டுள்ளது பிசிசிஐ தரப்பு.
பகல்-இரவு போட்டி என்பது மதியம் 2 மணியளவில் துவங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் ஒன்றாகும். கொல்கத்தாவில் இரவு 8 மணிக்கு மேல் பனிப்பொழிவு தாக்கம் உச்சத்தை பெறும் என்பதால் போட்டியை மதியம் 1 மணியளவில் துவங்கி இரவு 8 மணிக்கு முடிக்கும் வகையில் திட்டமிடும்படி, பெங்கால் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ-க்கு வேண்டுகோள் விடுத்தது.

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்த பிசிசிஐ தரப்பு, பகலிரவு டெஸ்ட் போட்டியை பனிப்பொழிவிற்கு ஏற்றாற்போல திட்டமிட்டு, இன்று போட்டிக்கான நேரத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இம்மாதம் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியின் முதல் செஷன் மதியம் 1 மணியளவில் துவங்கி 3 மணிவரை நடக்கும். 40 நிமிட உணவு இடைவேளை போல விடப்பட்டு, 2வது சேஷன் மீண்டும் 3.40 மணிக்கு துவங்கி 5.40 வரை நடக்கும். அதன்பின் 20 நிமிட தேநீர் இடைவேளைக்குப்பின், 3வது சேஷன் 6 மணிக்கு துவங்கி 8 மணி வரை நடைபெற்று, அன்றைய நாள் முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கு, பல சிறப்பு விருந்தினர்களை வரவேற்க பிசிசிஐ திட்டமிட்டு அழைப்புகளும் விடுக்கப்பட்டன. வங்கதேச பிரதமர் அழைப்பை ஏற்று வருவதற்கு ஒப்புக்கொண்டார். பிரதமர் மோடி இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.