கோஹ்லியை மட்டுமே நம்பி இந்திய அணி இல்லை; ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் காட்டம்
விராட் கோஹ்லி என்ற தனி ஒரு மனிதனை மட்டுமே நம்பி இந்திய அணி இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., அறிவித்தது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு, கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

மிக முக்கியமான தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் , இந்நாள் வீரர்கள் என பலரும் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டின் ஜோன்ஸ் கோஹ்லி என்ற தனி மனிதனை மட்டுமே நம்பி இந்திய அணி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து டீன் ஜோன்ஸ் கூறியதாவது, “இந்திய கிரிக்கெட் அணி என்பது விராட் கோலி என்ற ஒற்றை வீரரை நம்பி கிடையாது. அதேசமயம், விராட் கோலியின் இடத்தை நிரப்பவும் யாரும் இல்லை. ஆனால், நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இளம் வீரர்களான அம்பதி ராயுடு, மணீஷ் பாண்டே ஆகியோருக்கு தங்கள் திறமையை நிரூபிக்கச் சிறந்த வாய்ப்பு, அதேசமயம், இந்தத் தொடரில் அனைவருக்கும் வழிகாட்டும் தோனி இருக்கிறார் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா அணிக்கு கேப்டனாக வருவதன் மூலம், இளைஞர்கள் தங்கள் திறமையை நீருபிக்க சரியான களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
ரிவர்ஸ் ஸ்விங் செய்யக்கூடிய பந்துவீச்சாளர்களையும், 25 ஓவர்களுக்கு மேல் டெத் ஓவர்கள் வீசக்கூடிய பந்துவீச்சாளர்களும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் ஆகியோர் நன்றாக பந்துவீசக் கூடியவர்கள்.
நீல உடை அணிந்த இந்திய அணியும், பச்சை நிற உடை அணிந்த பாகிஸ்தான் அணியும் மோதுவதைப் பார்க்க கிரிக்கெட் உலகமே திரளும், அன்றைய நாள் கிரிக்கெட் உலகில் கொண்டாட்டம் மிக்க நாளாக மாறி இருக்கும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.
ஆசியக் கோப்பைப் போட்டித் தொடரை மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பார்க்கிறேன். கோலி விளையாடவில்லை என்பதைப் பற்றி நான் பொருட்டாகவே நினைக்கவில்லை. ஆனால், கிரிக்கெட் உலகம்முழுமைக்கும் இந்திய-பாகிஸ்தான் போட்டி மிகப்பெரிய எதிர்பார்பார்ப்பை ஏற்படுத்தும்” என்றார்.