இந்தியாவில் சையது முஷ்தாக் அலி கோப்பை டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த ‘சி’ பிரிவு அணிகளுக்கான லீக் போட்டியில் விதர்பா, ராஜஸ்தான் அணிகள் மோதின. மழை குறுக்கிட்டதால் போட்டி தலா 13 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
விதர்பா அணிக்கு கேப்டன் பாசல் 14 ரன்களும், அக்சய் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, மிகவும் தடுமாறியது. வங்கதேச தொடரை முடித்துவிட்டு வந்த தீபக் சகார் இப்போட்டியில் எதிரணியை மிரட்டினார்.
13வது ஓவரை வீசிய சகார் முதல் பந்தில் ரத்தோட் விக்கெட்டை எடுத்தார். நான்காவது பந்தில் தர்ஷன் விக்கெட்டை எடுத்தார். 5வது மற்றும் 6வது பந்தில் ஸ்ரீகாந்த் , வாட்கர் இருவரையும் அடுத்தடுத்து அவுட் ஆக்க, சகார் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
இறுதியாக, விதர்பா அணி நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் சகார் 4 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து பேட்டிங் செய்ய வந்த ராஜஸ்தான் அணிக்கு 13 ஓவரில் 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. துவக்க வீரர் மனீந்தர் சிங் 44 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி 13 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டும் எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
நாக்பூரில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியிலும், தீபக் சகார் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.