முதல் இன்னிங்ஸ் நல்லா போச்சுன்னு ஆடக்கூடாது, இனிமே தான் ட்விஸ்ட் இருக்கு – 5 விக்கெட் எடுத்தபின் ஜடேஜா பேச்சு!

நாக்பூர் மைதானத்தை பொறுத்தவரை, ஆட்டம் எப்போது எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியப்பின் பேசியுள்ளார் ஜடேஜா.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்தது ஆஸ்திரேலிய அணி.

கேப்டன் பேட் கம்மின்ஸ் எடுத்த இந்த முடிவு ஆஸ்திரேலியா அணிக்கு சரியாக செல்லவில்லையோ! என்று ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை ஆடிய பிறகு யோசிக்க வைத்திருக்கிறது. ஏனெனில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ரவீந்திர ஜடேஜா கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச போட்டிகளில் ஆடுகிறார். கம்பேக் கொடுத்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா அரைசதம் அடிக்க ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் முதல் நாள் முடிவில் இந்திய அணி எடுத்திருந்தது. தற்போது வரை ஆஸ்திரேலியா அணியை விட 100 ரன்கள் பின்தங்கியுள்ளது.

போட்டி முடிந்த பிறகு கொடுத்த பேட்டியில் நாக்பூர் மைதானம் பற்றியும் முதல் இன்னிங்சில் பந்துவீச்சு அமைந்தது பற்றியும் பேசியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. அவர் கூறியதாவது:

“இந்த மைதானம் எதிர்பார்த்த அளவிற்கு சுழல் பந்துவீச்சுருக்கு சாதகமாக இல்லை. மற்ற மைதானங்களை ஒப்பிடும் பொழுது இங்கு பந்து மிகவும் ஸ்லோ மற்றும் குறைந்த பவுன்ஸ் ஆகிறது. ஆகையால் இந்த மைதானத்தில் எவ்வளவு டார்கெட் வைத்தாலும் அதை கட்டுப்படுத்துவது எளிது என்று ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் போட்டி செல்ல செல்ல மைதானத்தின் போக்கு மாறியது. பேட்டிங் செய்வதற்கு நன்றாகவும் இருக்கிறது. ரன்களை கட்டுப்படுத்துவது எளிதல்ல என்றும் புரிந்தது. ஆனாலும் தற்போது வரை மைதானம் சுழல் பந்துவீச்சிற்கு ஏதுவாக இல்லை. பேட்ஸ்மேன் செய்யும் தவறை வைத்து மட்டுமே இங்கு விக்கெட் எடுக்க முடிகிறது. நிதானமாக விளையாடும் பட்சத்தில் நன்றாக பேட்டிங் செய்யக்கூடிய மைதானமாக இருக்கிறது.” என்று தெளிவுபடுத்தினார் ஜடேஜா.

Mohamed:

This website uses cookies.