டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எடுக்கப்பட்ட கிறிஸ் வோக்ஸ் இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆடப்போவதில்லை என தெரிவித்ததால் அவருக்கு மாற்று வீரராக தென்னாபிரிக்க வீரர் அன்ரிச் நோர்டியாவை டெல்லி அணி தேர்வு செய்துள்ளது.
வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க இருக்கிறது. இந்த சீசனுக்கான ஏலம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடத்தப்பட்டது. அதில் பல முன்னணி வீரர்கள் கோடிகளில் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
டெல்லி அணி இந்த ஐபிஎல் ஏலத்தில் சில முக்கிய வீரர்களை அணியில் எடுத்தது. அதில் ஒருவராக இருந்தவர் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ். இவர் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இங்கிலாந்து அணிக்கு தொடர்ந்து சிறப்பான வீரராக இவர் செயல்பட்டு வருகிறார். சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த பார்மில் இருந்து வரும் கிறிஸ் வோக்ஸ் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்தார். கிறிஸ் வோக்ஸ் “இங்கிலாந்து அணிக்கு எத்தனை நாட்கள் முடியுமோ அதுவரை தொடர்ந்து ஆடுவேன். அதுவே எனது விருப்பம். மற்ற டி20 தொடர்களில் ஆடுவதை விட இங்கிலாந்து அணிக்கு ஆடுவதை ஆர்வமாகக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து நல்ல நிலையில் ஆடிவரும் நான் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை. அதற்கு பதிலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறேன்.” என்றார்.
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கிறிஸ் வோக்ஸ் க்கு மாற்று வீரரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தேடிவந்தது. தென்ஆப்பிரிக்க அணியின் இளம் வீரர் அன்றிச் நோர்டியாவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி மாற்று வீரராக அறிவித்திருக்கிறது. இவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள் 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐபிஎல் தொடரில் இவர் கொல்கத்தா அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.