தன்னை விட 10 வயது இளம் வீரர்களைக் காட்டிலும் உடல் தகுதியிலும் சுறுசுறுப்பிலும் முன்னிலை வகிக்கிறார் தோனி என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டுமொரு முறை தோனிக்காக வாதாடியுள்ளார்.
எனவே தோனியை விமர்சிப்பவர்கள் அவர்கள் 36 வயதில் என்ன சாதித்தார்கள் என்பதைப் பார்க்கட்டும் என்கிறார் ரவிசாஸ்திரி.
ரவிசாஸ்திரி இது குறித்து கூறியதாவது:
நாங்கள் ஒன்றும் முட்டாள் அல்ல. கடந்த 30-40 ஆண்டுகளாக இந்த கிரிக்கெட்டை பார்த்து வருகிறோம். விராட் கோலியும் இந்த அணிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த 36 வயதில் தோனி 26 வயது இளம் வீரர்களை விஞ்சுவார் என்பது எங்களுக்குத் தெரியும். தோனியைப் பற்றி விமர்சிப்பவர்கள் தாங்கள் ஆடியதை மறந்து விடுகின்றனர்.
தோனி விமர்சகர்கள் கண்ணாடியில் தங்கள் உருவத்தைப் பார்த்து “36 வயதில் எப்படி இருந்தோம்” என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ளட்டும். 2 ரன்களை வேகமாக அவர்களால் ஓட முடியுமா? இவர்கள் 2 ஓடுவதற்குள் தோனி 3 ஓடி விடுவார். 2 உலகக்கோப்பைகளை வென்றுள்ளார், சராசரி 51 வைத்துள்ளார். இன்று வரை கூட அவரை மாற்றுவதற்கான விக்கெட் கீப்பர் நம்மிடம் இல்லை.
இருப்பதில் அவர் சிறந்தவர். இந்திய அணியில் மட்டுமல்ல உலக அளவிலும் சிறந்த வீரராக உள்ளார். அவரிடம் நீங்கள் பார்க்கும் சில விஷயங்கள் சந்தையில் விற்க முடியாதது. வேறு எங்கும் கிடைகாதது அது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஆடவில்லை என்பதால் 2019 உலகக்கோப்பை வரை ஒருநாள், டி20 போட்டிகளில் அவர் அதிகம் ஆட முடிகிறது.
தென் ஆப்பிரிக்கா தொடர் குறித்து :
எங்களைப் பொறுத்தவரை அனைத்து எதிரணியினரும் சமமே. அனைத்து எதிரணியினரையும் மதிக்க வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் நாம் இன்னும் தொடரை வென்றதில்லை. எனவே அங்கு சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. நம்பிக்கை உள்ளது, தென் ஆப்பிரிக்காவையும் இன்னொரு எதிரணியாகவே பார்ப்போம். மரியாதை உண்டு, ஆனால் வெற்றி பெறவே அங்கு செல்கிறோம்.

விராட் கோலியிடம் முக்கியமானது என்னவெனில் அவரது பணிக்கடமை உணர்வு. தான் என்னமாதிரியான வீரராக வர வேண்டும் என்ற சிந்தனை அவரது வாழ்க்கை முறையாகவே ஆகி விட்டது. இப்படி ஒரு கேப்டன் இருக்கும் போது மற்றவர்கள் கனவு மட்டுமே காணக்கூடியவற்றை இவர் சாதித்துக் காட்டுவார். சாக்குபோக்குகளுக்கு கோலியிடம் இடமில்லை.
மிக முக்கியமான விஷயம் என்னவெனில்;’நான்’ என்பதை தூக்கி எறிந்து நாம் என்பதை கட்டமைத்துள்ளோம். அணிப்பண்பாட்டுக்குள் ஒத்துழைக்க முடியாவிட்டால் தனி நபர்கள் வீட்டில் இருக்கலாம். அவர் எவ்வளவு பெரிய தனி வீரராக இருந்தாலும் சரி. இதுதான் இந்த அணியின் வித்தியாசம்.
இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி.