19ஆவது ஓவரின்போது தோனியின் காலில் என்ன ஆயிற்று? கணுக்காலில மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா? ஆகிய கேள்விகளுக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பதில் கொடுத்திருக்கிறார் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்.
ஐபிஎல் சீசன் துவக்க போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்து 178/7 ரன்கள் அடித்தது. சொந்த மைதானத்தில் இலக்கை துரத்திய குஜராத் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில வெற்றியும் பெற்றது.
இப்போட்டியில் குஜராத் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில், 19ஆவது ஓவரில் தோனி பந்தை தாவிப்பிடிக்க முயற்சித்தார். அப்போது தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. கலை அசைக்க முடியாமல் அப்படியே நின்றார். பிசியோ சிகிச்சைக்குப்பின் மீண்டும் கீப்பிங் செய்தார்.
இந்த போட்டிக்கு முன்பு தோனியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக சிஎஸ்கே தரப்பில் இருந்து தகவல்கள் வந்தது. இதனால் முதல் போட்டியில் விளையாடமாட்டாரா? என்கிற கேள்விகள் எழுந்தது. அப்போது சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், “தோனி முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். அவர் நிச்சயம் விளையாடுவார்” என்று கூறினார்.
கணுக்கால் பிரச்சினை இருக்கையில், போட்டியின் நடுவே தோனிக்கு திடீரென காலில் அசவுகரியம் ஏற்பட்டது ரசிகர்களின் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. பெரிய பிரச்சினையா? அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா? என பல சந்தேகங்கள் எழுந்தன. ரசிகர்களின் சந்தேகத்தை தீர்க்கும் விதமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டபோது விளக்கம் கொடுத்துள்ளார் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங். அவர் கூறியதாவது:
“மகேந்திர சிங் தோனிக்கு வெப்பம் காரணமாக தசைப்பிடிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது. அவரது கணுக்காலில் எந்தவித பிரச்சனையும் இல்லை. அவரைப் போன்ற சிறந்த தலைவர் அணிக்கு எவ்வளவு முக்கியம் என்று நன்கு தெரியும். ஒவ்வொரு விஷயத்தையும் கண்காணித்து வருகிறோம். அவரது வயதிற்கு சில வரம்புகள் இருக்கிறது. அதற்கேற்றவாறு அவர் செயல்பட்டு வருகிறார்.
தோனி, சிஎஸ்கே அணியின் லெஜெண்ட் மற்றும் மதிப்பு மிக்க வீரர். அவர் கட்டாயம் அடுத்தடுத்த போட்டிகளில் இருப்பார். இருக்கவேண்டும். தற்போது 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருக்கிறார்.” என கோச் தெளிவுபடுத்தினார்.
சிஎஸ்கே அணி தனது 2ஆவது போட்டியை வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.