சென்னை ஒருநாள் போட்டியில், மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில், 164 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்ததற்கு திட்டமிடுதல் சரியில்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.
அதாவது இந்திய அணி 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பிறகு ஓரளவுக்கு மீண்டு 100 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் மீதான தன் பிடியை தளரவிட்டது.
ஸ்மித் கூறியதாவது:
போட்டியை வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் 5 போட்டிகள் கொண்ட தொடர், இன்னும் 4 போட்டிகள் உள்ளன. கொல்கத்தாவில் பதிலடி கொடுப்போம். நாங்கள் விரும்பிய அளவில் திட்டமிடுதலும் செயல்படுத்தலும் நடக்கவில்லை.

மழை வந்தது, இதனால் 160 ரன்கள் இலக்கு நிச்சயம் எளிதானதல்ல. அதுவும் 2 பக்கமும் புதிய பந்துகளில் வீசும்போது கடினமே. வித்தியாசமாக ஆடியிருக்க வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் நிதானமாக ஆடி, திட்டமிடுதலை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்.
பாண்டிய, தோனி 118 ரன்களைச் சேர்த்தனர். 87-லிருந்து 206 ரன்களுக்கு எடுத்துச் சென்றனர். கடைசியில் இதுதான் மேட்ச் வின்னிங் கூட்டணியாகி விட்டது. புதிய பந்தில் அருமையாகத் தொடங்கினோம் ஆனால் தோனி, பாண்டியாவும் அருமையாக ஆடினர்.
கேட்ச்களை விடுவது சரியல்ல, நானே ஒரு கேட்சை விட்டேன், பந்து எனக்கு யார்க்கர் ஆனது. அதனால் கேட்சை விட்டேன்.
நல்ல பந்து வீச்சுத் தொடக்கத்தை வெற்றியாக மாற்றாதது நல்ல அறிகுறியல்ல. நான் கூல்ட்டர்-நைல் உடன் தொடங்கி பாட் கமின்ஸ் உடன் இறுதி ஓவர்களை வீசத் திட்டமிட்டேன்.
ஆனால் தோனி, எதிர்பார்த்ததைப் போலவே ஜேம்ஸ் பாக்னரை நன்றாகவே அடித்து ஆடினார்., அவரை அங்கு பந்து வீச அழைத்தது பொருத்தமானதல்ல, ஆனால் இதுதான் கிரிக்கெட், தோனி ஒரு தரமான வீரர், இறுதி ஓவர்களில் அபாயகரமானவர்.
விரட்டலில் 21 ஓவர்களில் 164 ரன்கள் என்பது ஒரேயொரு புதிய பந்தை எதிர்கொள்ளுமாறு இருந்திருந்தால் எளிதில் வெற்றி பெற்றிருக்க முடியும். இரண்டு பக்கமும் புதிய பந்துகள் எங்களுக்குக் கடினமாக்கியது.
ஆரம்பத்தில் கொஞ்சம் நிதானித்து பிறகு அடித்து ஆடியிருக்கலாம், ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மீது எந்த ஒரு தனிக்கவனமும் இல்லை. நல்ல வேகப்பந்து வீச்சாளர்களும் இந்திய அணியில் உள்ளனர், எனவே ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மீது எங்கள் கவனம் துளிக்கூட இல்லை என்பதையும் கூறிவிடுகிறேன்.

விக்கெட்டுகளை இழந்து கொண்டிருக்கும் போது 20 ஓவர்கள் ஆடுவது என்பது கடினம்தான்.
இவ்வாறு கூறினார் ஸ்மித்.