இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மீது கடந்த 2015-ஆம் ஆண்டு சூதாட்டப் புகார் எழுந்தது. எனவே, அந்த இரண்டு அணிகளும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன. அந்த தடைக்காலம் கடந்த ஜூலை மாதம் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து இரு அணிகளும் வரும் ஐபிஎல்லில் மீண்டும் களம் இறங்குகின்றன.
இதனால், ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடிய தோனியை, ஏலத்தில் எடுக்க பிற அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்க கூடும் என்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் புதிய திட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, புனே மற்றும் குஜராத் அணிகளுக்காக விளையாடிய வீரர்களில் மூன்று பேரை (ஒரு உள்நாட்டு வீரர், 2 வெளிநாட்டு வீரர்கள்) சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தங்கள் அணிக்கே எடுத்துக்கொள்ளலாம். அணி உரிமையாளர்கள் முன்னிலையில் இந்த திட்ட முன்வடிவு சமர்பிக்கப்படும் என்றும் ஐபிஎல் பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த திட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், தோனி தானாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பி விடுவார். ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா கூறுகையில், “ கடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்காகவும், புனே அணிக்காகவும் விளையாடிய வீரர்கள் மீண்டும் அவர்கள் பழைய அணிக்கே செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. சென்னை அணிக்காக ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், டோணி ஆகியோர் ஆடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இதுகுறித்த முறையான தகவல் விரைவில் தெரிவிக்கப்படும் என்றார்.