ஐபிஎல் போன்ற லீக் போட்டிகள் வந்தபின் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் ரசிகர்களுடன் சேர்த்து வீரர்களுக்கும் குறைந்து கொண்டே வருகிறது என தைரியமாக பேட்டி அளித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்த வருடம் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு எடுத்திருக்கிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியை அடைந்திருக்கின்றனர்.
பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பேற்ற பிறகு, இங்கிலாந்து அணி அதிரடியான அணியாக மாறியுள்ளது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் ப்ரண்டன் மெக்கல்லம் கூட்டணி ஆக்ரோஷத்துடன் விளையாடி நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் சமீபத்தில் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணியை 3-0 என வீழ்த்தி வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது.
சர்வதேச கிரிக்கெட்டுகள் பற்றி கருத்துக்கள் தெரிவித்து வரும் பென் ஸ்டோக்ஸ், ஐசிசி கொடுக்கும் போட்டிகளுக்கான அட்டவணைகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு குறைந்து வருவது என பலவற்றிற்கு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது:
“ஐசிசி அணிகளுக்கு கொடுக்கும் அட்டவணை முற்றிலும் அர்த்தமற்றதாக இருக்கிறது. உதாரணமாக டி20 உலககோப்பை முடிந்தவுடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடத்தப்பட்டது. உலகக்கோப்பை முடிந்த இரு தினங்களிலேயே, இந்த தொடர் துவங்கியதால் வீரர்களுக்கும் மிகுந்த சோர்வு ஏற்படக்கூடும். மேலும் பல வீரர்கள் காயமடைவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இதனை கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் ஒருவார காலமாவது ஓய்வு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ரசிகர்களும் ஆர்வத்துடன் கண்டுக்களிக்கவில்லை. வெறுமனே நடத்த வேண்டும் என்ற கோணத்தில் நடத்தியவாறு இருந்தது.”
“உலகில் பல நாடுகளிலும் தற்போது லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது வந்ததால் பல வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றது. அவர்களின் மீது கவனமும் திரும்புகிறது. நான் இதை வரவேற்கின்றன.
அதேநேரம் பலரும் லீக் போட்டிகளில் நன்றாக விளையாடினால் போதுமானது என நினைக்கத் துவங்கிவிட்டனர். சர்வதேச போட்டிகள் மீது பல வீரர்கள் கவனத்தை செலுத்துவதில்லை. ஒரு சில வீரர்களே டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகின்றனர். அவர்களும் சில போட்டிகளில் ஆடியபிறகு நிரந்தரமாக டெஸ்ட் போட்டிகளை தவிர்த்து வருகின்றனர். என்னை பொருத்தவரை, கிரிக்கெட் போட்டிகள் என்றால் டெஸ்ட் போட்டிகள் தான். அதற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். இதற்கு ஐசிசி முழு கவனம் செலுத்தி முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். அதேபோல் லீக் போட்டிகளை நடத்தும் நாடுகளும் சர்வதேச போட்டிகளை கருத்தில் கொண்டு அட்டவணைகள் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் குறைந்தபட்ச ஆர்வம் இருக்கும். வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு முனைப்பு காட்டுவார்கள்.” என்று பென் ஸ்டோக்ஸ் பேட்டி அளித்தார்.
மேலும், கிரிக்கெட் வளர்ப்பது என்றால், அது டெஸ்ட் போட்டிகளை வளர்ப்பது தான். கிரிக்கெட் விளையாடுவது மட்டுமே வளர்ப்பது ஆகிவிடாது. பலரை டெஸ்ட் போட்டிகள் நோக்கி நகர்த்துவதற்கு ஐசிசி விரைவாக ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்றும் பென் ஸ்டோக்ஸ் பேசினார்.