உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்லாது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பும் தினேஷ் கார்த்திக்-கிற்கு கேள்விக்குறியாகியுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் கடைசி இரு லீக் போட்டிகள் மற்றும் அரை இறுதி போட்டியிலும் தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டார். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரர்கள் ஆட்டத்தை முடித்து விட்டதால், இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை கருதி அரையிறுதியில் மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதல் மூன்று வீரர்களும் தலா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் ஐந்தாவதாக வழக்கம்போல தோனி களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்முறை தோனி அமர்த்தப்பட்டு, தினேஷ் கார்த்திக் ஐந்தாவது இடத்தில் களம் இறங்கினார். தன்னை நிரூபித்துக் கொள்ள மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தும் அதை 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து தவறவிட்டார். இதனால் அணி நிர்வாகம் இவர் மீது மிகவும் அதிருப்தி அடைந்தது.
தினேஷ் கார்த்திக் மற்றும் கேதர் ஜாதவ் இருவருக்கும் அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் அணியில் இடம் கிடைப்பது தஸேபோது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பில் இருந்து வரும் தினேஷ் கார்த்திக் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜாக்குவஸ் காலிஸ் மற்றும் துணை பயிற்சியாளர் சைமன் காட்டிச் இருவரும் அந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தற்போது இவரின் கேப்டன் பொறுப்பு குறித்தும் அணி நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.