சஹா விலகல்… அவசரமாக தென் ஆப்ரிக்கா பறக்கிறார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த விரக்திமான் சஹா தொடரில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம்பெற உள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் வெறும் 208 ரன்களை எடுக்க முடியாத இந்திய அணி, 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரான சஹாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இரு அணிகள் இடையேயான இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் சஹா இடம்பெறவில்லை, அவருக்கு பதிலாக பார்தீவ் பட்டேல் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் சஹாவிற்கு பதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு பி.சி.சிஐ., அழைப்பு விடுத்துள்ளது. இரு அணிகள் இடையேயான மூன்றாவது போட்டிக்கு முன்னதாக அணியில் இணைந்து கொள்ள வேண்டும் என்று தினேஷ் கார்த்திக்கிடம் பி.சி.சி.ஐ அறிவுறுத்தியுள்ளது.
சஹாவிற்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்ட பார்தீவ் பட்டேலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாதததும் தினேஷ் கார்த்திக் அணிக்கு அழைக்கப்பட முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் சையத் முஸ்தாக் அலி டிராபி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் அபாரமாக விளையாடி நல்ல ஃபார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.