ஜூன் மாதம் 1ஆம் தேதி இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ ஒரு வாரத்திற்கு முன் அறிவித்தது. கொல்கத்தா வீரர் மனிஷ் பாண்டே ஐபில் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டதால் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடரில் இருந்து விலகுவதை பிசிசிஐ அறிவித்தது. அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் விளையாடுவார் என தனது ட்விட்டர் பக்கத்தில் பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த ஐபில்-இல் குஜராத் லயன்ஸ் அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி வந்தார். இந்த ஐபில்-இல் அவர் விளையாடிய 14 போட்டிகளில் 361 ரன்கள் (சராசரி 36.10) அடித்துள்ளார். கடைசியாக 2013-இல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராப்பிக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடித்திருந்தார்.
இந்த சாம்பியன்ஸ் ட்ராப்பியில் தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்திக்கவுள்ளது இந்தியா. இந்த முறை நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது இந்தியா. கடந்த சாம்பியன்ஸ் ட்ராப்பியில் இறுதி போட்டியில் இங்கிலாந்தை 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது இந்தியா. சென்ற சாம்பியன்ஸ் ட்ராப்பியில் தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, இந்த முறை விராட் கோலி தலைமையில் களமிறங்கவுள்ளது.
கேப்டன் பதவிக்கு வந்த பிறகு கோலி செம்ம பார்மில் இருக்கிறார். அவரின் தலைமையில் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. பாகிஸ்தான் அணிக்கு பிறகு இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுடன் மோதபோகிறது இந்தியா.