பொளந்து கட்டிய தினேஷ் கார்த்திக்; மீண்டும் இந்திய அணியில் இடம்..? 1

பொளந்து கட்டிய தினேஷ் கார்த்திக்; மீண்டும் இந்திய அணியில் இடம்..?

விஜய் ஹசாரே தொடரில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் தமிழ்நாடு அணியே அபார வெற்றி பெற்றது.

உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே தொடரில் இதுவரை ஆடிய போட்டிகளில் ஒன்றில் கூட தமிழ்நாடு அணி தோற்காத நிலையில், நேற்றைய போட்டியில் மத்திய பிரதேச அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் 24 ரன்களிலும், இதுவரை அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்த பாபா அபரஜித் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பொளந்து கட்டிய தினேஷ் கார்த்திக்; மீண்டும் இந்திய அணியில் இடம்..? 2

ஆனால் மற்றொரு தொடக்க வீரரான அபினவ் முகுந்த் அபாரமாக ஆடி சதமடித்தார். அபினவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடிய விஜய் சங்கர் 90 ரன்களை குவித்து 42வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அபினவுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். சதத்திற்கு பிறகு அதிரடியாக ஆடிய அபினவ் 147 ரன்களில் 45வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

45வது ஓவர் முடிவில் 285 ரன்கள் எடுத்திருந்த தமிழ்நாடு அணி, கடைசி 5 ஓவர்களில் 75 ரன்களை குவித்தது. அதற்கு காரணம் தினேஷ் கார்த்திக்கின் காட்டடி பேட்டிங். தான் ஒரு சிறந்த ஃபினிஷர் என்பதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக இந்த இன்னிங்ஸை ஆடினார் தினேஷ் கார்த்திக். வெறும் 28 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்தார் தினேஷ் கார்த்திக். வாஷிங்டன் சுந்தர் தன் பங்கிற்கு 10 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார்.

பொளந்து கட்டிய தினேஷ் கார்த்திக்; மீண்டும் இந்திய அணியில் இடம்..? 3

தினேஷ் கார்த்திக்கின் கடைசி நேர காட்டடியால் தமிழ்நாடு அணி 50 ஓவரில் 360 ரன்களை குவித்தது. 361 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆடிய மத்திய பிரதேச அணியில் ஒரு வீரர் கூட 40 ரன்னையே கடக்கவில்லை. அந்த அணி 29 ஓவரில் வெறும் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை அடுத்து தமிழ்நாடு அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *