நீங்க தாண்டா ஓவர் பில்டப் கொடுக்குறீங்க… விசயம் ஒன்னும் இல்ல; ரோஹித் சர்மாவை விமர்சித்த முன்னாள் வீரர்
ரோஹித் சர்மாவின் கேப்டன்சி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பானதாக இல்லை என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 12ம் தேதி துவங்க உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததால், விண்டீஸ் அணியை எதிர்கொள்ள இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை முன்னாள் வீரர்கள் பலர் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா – விண்டீஸ் அணியுடனான எதிர்வரும் கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்து பேசியுள்ளார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “ஐ.பி.எல். கோப்பையை 5 முறை கைப்பற்றிய ரோகித் சர்மா. இந்திய அணியில் தனது பெயரை நிலை நிறுத்தவில்லை. அவரிடம் இருந்து நான் அதிகம் எதிர்பார்த்தேன். இந்தியாவில் விளையாடுவதும், வெளிநாட்டில் ஆடுவதும் மாறுபட்டதாகும். ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் 20 ஓவர் உலக கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வீரர்கள் தேர்வு, அணியை நடத்திய விதமும் ஏமாற்றத்தை கொடுத்தது” என்று தெரிவித்தார்.