நான் முதலில் இந்தியன் ; ரசிகர்களின் மனதை வென்ற இர்பான் பதான்
பந்து வீச ஓடி வருகையில் முஸ்லீம் என்றெல்லாம் நினைக்க மாட்டேன் என்றும் முதலில் தான் ஒரு இந்தியன் என்றும் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அந்த போராட்டத்தின் போது பொதுச்சொத்துகளும் சேதமடைந்தன. அப்போது போலீசார் தடியடியிலும் ஈடுபட்டனர். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், “அரசியல் பழிவாங்கும் விளையாட்டு என்றுமே தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், நானும் எனது நாடும் ஜாமியா மிலியா மாணவர்களை நினைத்துக் கவலை கொள்கிறோம்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேசிய அவர் தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.
Political blame game will go on forever but I and our country?? is concerned about the students of #JamiaMilia #JamiaProtest
— Irfan Pathan (@IrfanPathan) December 15, 2019
அதில், “என் சொந்தக்கதையை சொல்கிறேன். 2004ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விளையாடச் சென்றபோது நான், ராகுல் ட்ராவிட் உள்ளிட்டோர் கல்லூரி ஒன்றுக்கு சென்றோம். அங்கு கூடியிருந்த 1500 மாணவர்களிடையே உரையாற்றினோம். அப்போது கோபத்துடன் எழுந்த பெண் ஒருத்தி, நீங்கள் முஸ்லீமாக இருந்துக்கொண்டு ஏன் இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு இந்தியா என் நாடு. அதற்காக விளையாட பெருமைபடுகிறேன். என் முன்னோர்கள் அங்கிருந்தவர்கள். அந்த நாட்டுக்காக விளையாடுவதை பெருமையாக கருதுகிறேன் என தெரிவித்தேன். அனைவரும் கைத்தட்டி பாராட்டினார்கள். நான் திறந்தவெளியில் பாகிஸ்தானில் அப்படி பேசினேன் என்றால், இந்தியாவில் என் கருத்தை பேச யாருடைய அனுமதியும் எனக்கு தேவையில்லை. நான் பந்து வீச ஓடி வருகையில் முஸ்லீம் என்றெல்லாம் நினைக்க மாட்டேன். முதலில் நான் இந்தியன் என தெரிவித்தார்.