கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது தோனியை தவிர மற்றவர்கள் யாரும் தனக்கு ஆதரவாக இல்லை என விராட் கோலி பேசியிருந்தது பிசிசிஐ., நிர்வாகிகளை அதிருப்திக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு வருடத்திற்கும் மேலாக பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாததால் கடும் விமர்ச்சனங்களை எதிர்கொண்டு வந்த விராட் கோலி, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஓய்வு எடுத்துவிட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்திய அணி விளையாடியுள்ள மூன்று போட்டியிலும் விராட் கோலி மிக மிக சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மூன்று போட்டியில் இரண்டு போட்டியில் அரைசதமும் அடித்த விராட் கோலி, மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்து வருகிறார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய நிலையில், விராட் கோலி ஒருவர் மட்டுமே இறுதி வரை போராடி இந்திய அணி நல்ல ஸ்கோரை குவிப்பதற்கு உதவினார்.
பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் சிறப்பாக விளையாடியதால், பாகிஸ்தான் அணியுடனான போட்டி குறித்தான செய்தியாளர் சந்திப்பிலும் பங்கேற்ற விராட் கோலி, செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு விசயங்களை ஓபனாக பேசினார். இதில் குறிப்பாக தான் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது தோனியை தவிர வேறு யாருமே தனக்கு ஆதரவாக இல்லை. பலரிடமும் எனது தொலைபேசி எண் உள்ளது, ஆனால் தோனியை தவிர ஒருவர் கூட என்னிடம் எதுவும் பேசவில்லை என பேசியிருந்தார்.
விராட் கோலியின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கோலி மற்றும் தோனி மீதான நன்மதிப்பை அதிகரித்திருந்தாலும், பிசிசிஐ., நிர்வாகிகளோ விராட் கோலியின் இந்த பேச்சால் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து பிசிசிஐ., நிர்வாகி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில், “விராட் கோலி எதற்காக இப்படி பேசினார் என எங்களுக்கு சுத்தமாக புரியவில்லை. விராட் கோலிக்கு ஒட்டுமொத்த அணியும் ஆதரவாகவே உள்ளது. அவர் தனக்கு தேவையான நேரத்தில் ஓய்வு எடுத்து கொள்ளும் அளவிற்கு ஒட்டுமொத்த பிசிசிஐ.,யும் விராட் கோலிக்கு ஆதரவாகவே உள்ளது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது அனைத்து நிர்வாகிகளும் தங்களது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர், இப்படி இருக்கையில் கோலி எதற்காக அப்படி பேசினார் என தெரியவில்லை” என்று தெரிவித்தார்.