ஒருநாள் தொடரின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலியை சீண்டாதீர்கள் என்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கில்லெஸ்பி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. பேட்டிற்கும் பந்திற்கும் இடையில் சமமான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2013-ல் ஆஸ்திரேலியா இந்தியா வந்தபோது 3-2 என ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியது. இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் 300 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டது. பந்து வீச்சாளர்கள் திணறிப்போனார்கள்.
இதனால் இந்த தொடரிலும் அதிக அளவில் ரன் குவிக்கப்படலாம் என கருதப்படுகிறது. இரு அணிகள் மோதும்போது வீரர்கள் கடுமையாக நடந்து கொள்வார்கள். ஸ்லெட்ஜிங், வார்த்தை போர்கள் அதிக அளவில் நடைபெறும். ஆஸ்திரேலிய வீரர்கள் விராட் கோலியை குறி வைத்துள்ளனர். இதனால் விராட் கோலியை சீண்டிக்கொண்டே இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் விராட் கோலியை சீண்ட வேண்டாம் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கில்லெஸ்பி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கில்லெஸ்பி கூறுகையில் ‘‘விராட் கோலியை சீண்டாதீர்கள். கோலி மிகவும் அற்புதமான வீரர். ஒருமுறை நீங்கள் பீல்டிங் முறையை விரிக்கத் தொடங்கினால், அவர் பாதுகாப்பாக பேட்டிங் செய்து விடுவார். விராட் கோலிக்கு எதிராக வார்த்தை போரில் ஈடுபட வேண்டும், இவருக்கு எதிராக அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்பது ஆஸ்திரேலியாவிற்கு தேவை என்று நான் நினைக்கவில்லை.
சரியான திசையில் பந்து வீசி அவரை நெருக்கடிக்குள்ளாக்குவது சிறந்த வழியாகும். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர் பந்துகளை வீசி, விராட் கோலியை பேக் புட் வைத்து விளையாட வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதுகுறித்து அவரை யோசிக்க வைக்க வேண்டும். மீண்டும் அதே பந்தை வீசுகையில், முன்னால் வந்து டிரைவ் ஷாட் ஆட விரும்புவார். அந்த சூழ்நிலையில் விக்கெட்டை வீழ்த்த வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் கேட்ச் பிடிப்பதற்கு சரியான திசையில் வீரர்களை நிறுத்தி ஸ்டம்பை நோக்கி பந்து வீசலாம்’’ என்றார்.