இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனான ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக வாய்ப்பே இல்லை என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான சீனியர் வீரர்கள் கொண்ட இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் பலரை உள்ளடக்கிய முதல் தர இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது.
இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி தொடரையும் வென்றுள்ளது.

விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத இளம் படை இலங்கை அணியை அசால்டாக துவம்சம் செய்து வருவது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைசிறந்த இளம் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு அடுத்தடுத்து கிடைத்து வருவதன் மூலமே இந்திய அணிக்கு இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது என்றால் அது மிகையல்ல.
இதனால், இளம் வீரர்கள் பலரை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்து வரும் ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்ற விவாதமும் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “இந்திய அணியின் பயிற்சியாளருக்கான போட்டியில் ராகுல் டிராவிட் தன்னை இணைத்துக்கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். ஒருவேளை அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பினால், அவருக்கு ஒரே போட்டி ரவி சாஸ்திரியாகத்தான் இருப்பார். ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. ரவி சாஸ்திரியே தொடர்ந்து பயிற்சியாளராக நீடிப்பார் என்றே நினைக்கிறேன் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.