சஹா-கில் ஜோடி ஓபனிங்கில் 142 ரன்கள் குவித்து அசத்தியது. லக்னோ பவுலர்களை பந்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 227 ரன்கள் குவித்தது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடியின் மைதானத்தில் நடைபெற்று வரும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங் தேர்வு செய்தது.
குஜராத் அணிக்கு சஹா மற்றும் கில் இருவரும் ஓபனிங் செய்தனர். சஹா ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். கில் நிதானமாக விளையாடி வந்தார். இந்த ஜோடி 6 ஓவர்களில் 78 ரன்கள் குவித்து மிரட்டியது.
பவர்-பிளே ஓவருக்கு பிறகு சஹா சற்று நிதானம் காட்ட, ஷுப்மன் கில் வெளுத்துவாங்க துவங்கினார். இதனால் குஜராத் அணியின் ஸ்கொர் உயரத்துவங்கியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் லக்னோ பவுலர்கள் முழிபிதுங்கினர்.
12 ஓவர்களில் 142 ரன்கள் குவித்தது சஹா-கில் ஜோடி. 13ஆவது ஓவரின் முதல் பந்தில் சஹா அவுட்டானார். இவர் 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகள் உட்பட 81 ரன்கள் அடித்தார்.
அடுத்து வந்த ஹர்திக் பண்டியா 15 பந்துகளில் 25 ரன்கள் அடித்து அவுட்டானார். இவரது கேட்சை அண்ணன் க்ருனால் பாண்டியா பிடித்தார். கில்- ஹர்திக் பாண்டியா ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தனர்.
கில் மிகச்சிறப்பாக விளையாடி இறுதிவரை அவுட்டாகாமல் குஜராத் அணி மிகப்பெரிய ஸ்கொரை எட்ட உதவினார். கில் 51 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 94 ரன்கள் அடித்தார். டேவிட் மில்லர் 12 பந்துகளில் 21 ரன்கள் அடித்தார்.
இறுதியாக குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 227 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணிக்கு இதுதான் அதிகபட்சமான ஸ்கொர் ஆகும்.
ஏற்கனவே இந்த சீசனில் 254 ரன்கள் அடித்திருக்கும் லக்னோ அணி, தனது பலமான பேட்டிங் லைன்-அப் வைத்து 228 ரன்கள் இலக்கை சேஸ் செய்து வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.