முகமது ஷமி தேவை இல்லை… அடுத்த போட்டியில் இவருக்கு வாய்ப்பு கொடுங்கள்; முகமது கைஃப் அதிரடி பேச்சு
ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டால் முகமது ஷமி ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
சமகால இந்திய கிரிக்கெட் அணியில் பெரிதும் பேசப்படாத, புகழப்படாத வீரர்களில் முகமது ஷமியும் ஒருவர். தற்போதைய இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான முகமது ஷமி, தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்து, பல்வேறு சாதனைகள் படைத்திருந்தாலும், பும்ராஹ் போன்ற வீரர்களுக்கு கிடைத்த ஆதரவும், புகழும் முகமது ஷமிக்கு கிடைக்கவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் தொடர் முகமது ஷமி பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், இந்திய அணியின் ஆடும் லெவனில் அவருக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. பேட்டிங்கிற்கு கூடுதல் பலம் என்பதற்காக முகமது ஷமியை விட ஷர்துல் தாகூருக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இந்திய அணி, நடப்பு உலகக்கோப்பை தொடரின் முதல் நான்கு போட்டியிலும் முகமது ஷமிக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கவில்லை. முகமது ஷமிக்கு பதிலாக ஆடும் லெவனில் சேர்க்கப்பட்ட ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பியதாலும், வங்கதேச அணியுடனான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டதாலும், நியூசிலாந்து அணியுடனான போட்டிக்கான ஆடும் லெவனில் முகமது ஷமிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ரீ எண்ட்ரீ கொடுத்த முகமது ஷமி, தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்தது மட்டும் இல்லாமல், நியூசிலாந்து அணியின் ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி, இந்திய அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை முகமது ஷமி சரியாக பயன்படுத்தி கொண்டதால், அடுத்தடுத்த போட்டிகளிலும் முகமது ஷமி விளையாட வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே போன்று ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டால் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட போவது யார் என்ற கேள்வியையும் முன்னாள் வீரர்கள் பலர் முன் வைத்து வருகின்றனர்.
அந்தவகையில், முகமது ஷமி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப், ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டால் முகமது ஷமி ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து முகமது கைஃப் பேசுகையில், “கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் அடுத்தடுத்த போட்டிகளை தங்களது திட்டங்கள்படியே எதிர்கொள்ள வேண்டும். ஷமி உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் திட்டத்தில் இல்லை, எனவே ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பிவிட்டால் முகமது ஷமி ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா ஆடும் லெவனில் சேர்க்கப்பட வேண்டும். இங்கிலாந்து அணியுடனான அடுத்த போட்டிக்கு முன்பாகவே ஹர்திக் பாண்டியா குணமடைந்துவிட்டாலும் அவருக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.