தந்தையின் மறைவு குறித்து ரசீத் கான் ட்விட்டரில் உருக்கம்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான ரஷித் கானின் தந்தை நேற்று காலமானார். இந்த செய்தியை மிகுந்த வேதனையுடன் ரஷித் கான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் லெக் ஸ்பின்னர் ரஷித் கான். சிறிய நாட்டு அணியில் ரஷித் கான் இருந்தாலும், இவரின் சுழற்பந்துவீச்சுக்கு சர்வதேச அளவில் அஞ்சாத வீரர்களே இல்லை.

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும், ஐபிஎல், பிக் பாஷ், பாகிஸ்தான் லீக், வங்கதேச லீக் அனைத்திலும் ரஷித் கான் தனது பந்துவீச்சில் முத்திரை பதித்துள்ளார்.
மிகக்குறைந்த வயதில் விரைவாக ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும் ரஷித் கான் பெற்றுள்ளார். மேலும், இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் ரஷித் கான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் லீக் போட்டியில் ரஷித் கான் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். ரஷித் கானின் தந்தை நேற்று திடீரென காலமானதையடுத்து மிகுந்த வேதனையுடன் அந்தச் செய்தியை அவர் ட்விட்ரில் பகிர்ந்து, தாய்நாட்டுக்குச் சென்றுள்ளார்.

ரஷித் கான் ட்விட்டரில் கூறுகையில், “ இன்று, நான் என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு மனிதரை இழந்துவிட்டேன். என் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய என் தந்தை இனி இல்லை. நான் மனவலிமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் (என் தந்தை) எப்போதும் என்னிடம் கேட்பது ஏன் எனத் தெரிந்துவிட்டது. இன்று உங்கள் இழப்பை நான் தாங்கிக்கொள்ள எனக்கு மனவலிமை அவசியம் தேவை. நான் உங்களை மிஸ் பண்றேன் “ எனத் தெரிவித்துள்ளார்.
Inna lillahi wa inna ilayhi raji'un
Dad, your memories have become my heartbeats & will stay with me for the rest of my life. I became #RashidKhan because of your duas & you are no longer with me to share my achievements. I have so much left to say to you. I Miss You. ??? pic.twitter.com/BLuIuz8Cgy
— Rashid Khan Foundation (@RashidKhanFund) December 30, 2018
ரஷித் கான் தந்தை மறைவுக்கு சக கிரிக்கெட் அணி வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆப்கன் அணி வீரர் முகமது நபி ட்விட்டரில் கூறுகையில், “ என்னுடைய நண்பரின் தந்தை மறைவு என்ன துயரத்தில் ஆழ்த்துகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கும் இந்த தகவலைத் தெரிவித்துவிட்டேன். ரஷித் கான் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலயாவில் உள்ள அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ், ஐபிஎல் போட்டியில் உள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆகியவையும் ரஷித் கான் தந்தை மறைவுக்கு ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளன. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேஸன் கில்லஸ்பி, இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்ஸன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.