இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி நிச்சயம் அதிக ரன்கள் குவிப்பார் என முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி (ஒத்திவைக்கப்பட்ட போட்டி), மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் முதலில் நடைபெறும் இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயராகி வருகின்றனர்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை, அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதால், இந்தியா இங்கிலாந்து இடையேயான இந்த டெஸ்ட் போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி, இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் எப்படி சமாளிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி குறித்து தினமும் பல்வேறு விசயங்கள் பேசி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக், விராட் கோலி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் அதிகமான ரன்கள் குவிப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேவாக் பேசுகையில், “விராட் கோலி கடைசியாக எப்போது சதம் அடித்தார் என்பது எனக்கு நியாபகமே இல்லை, எனக்கும் மட்டும் இல்லை பலருக்கும் அது நினைவில் இருக்காது. சமீப காலமாக விராட் கோலி மோசமாக விளையாடி வருகிறார் என்பது உண்மை தான், ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பழைய விராட் கோலியை பார்க்கலாம் என நம்புகிறேன். அவர் தனது கடினமான நாட்களை கடந்துவிட்டார் என்றே எனக்கு தோன்றுகிறது. இனி வரும் போட்டிகளில் விராட் கோலியிடம் இருந்து அவரது பழைய ஆட்டத்தை பார்க்கலாம். பயிற்சி போட்டியிலேயே விராட் கோலி தனது ரன்வேட்டையை துவங்கிவிட்டார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் விராட் கோலி நிச்சயம் அரைசதம் அடிப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
விராட் கோலி பயிற்சி போட்டியின் முதல் இன்னிங்ஸில் 33 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 67 ரன்களும் எடுத்தார். விராட் கோலி பயிற்சி போட்டியில் விளையாடிய விதத்தை வைத்தே சேவாக் தனது இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.