சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்து இருக்கிறார் இங்கிலாந்து வீரர் இயான் பெல்.
இயான் பெல் இங்கிலாந்து அணிக்காக 2004ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தார். லிமிடெட் ஓவர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்த இவர், டெஸ்ட் போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி இங்கிலாந்து அணிக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். பலமுறை தனித்து நின்று அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
2006ம் ஆண்டு வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஐசிசி விருதினை இவர் பெற்றார். இவரது கிரிக்கெட் வளர்ச்சிக்கு இந்த விருது மிகவும் உதவிகரமாக இருந்தது. ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் இவர் பல தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றிருக்கிறார்.
சுமார் பதினோரு ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக ஆடி வந்த இவர், கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் எதிலும் இடம்பெறவில்லை. இருப்பினும் கவுன்டி போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார்.
தற்போது 38 வயதாகும் பெல், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இவர் கூறுகையில் “இத்தனை ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காகவும் கவுன்டி போட்டிகளிலும் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னுமும் கிரிக்கெட்டிற்க்காக பலவற்றை செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கிறேன். ஆனால் அதற்காக உடல் எனக்கு ஒத்துழைக்க வேண்டும். எனது உடலில் சற்று தளர்வு ஏற்பட்டு இருப்பதை நான் உணர்கிறேன். இதுவே ஓய்வு பெறுவதற்கான சரியான தருணம் எனவும் நான் நினைக்கிறேன்.” என குறிப்பிட்டு ஓய்வு முடிவை அறிவித்தார்.
It’s true when they say you know when the time’s right, and unfortunately, my time is now.
It’s been a pleasure.
Thank you.
???????? pic.twitter.com/u7Altf9qpT— Ian Bell (@Ian_Bell) September 5, 2020
இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி வீரர்களில் இவரும் ஒருவர். 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7700 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். அதில் 22 சதஙகளும் மற்றும் 46 அரை சதங்களும் அடங்கும்.
அதேபோல் 161 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் கிட்டத்தட்ட 5500 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 4 சதங்களும் அடங்கும்.
முதல்தர போட்டிகளில் சுமார் 311 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 20 ஆயிரம் ரன்களுக்கும் மேல் அடித்து வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.