ஐந்து விக்கெட்டுகளை அள்ளிய சுட்டி குழந்தை சாம் கர்ரான்… 112 ரன்களில் சுருண்டது ஆஃப்கானிஸ்தான்
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி வெறும் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதி வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஹசரத்துல்லாஹ் ஜாசி 7 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான குர்பாஸ் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் களமிறங்கிய இப்ராஹிம் ஜார்டன் 32 ரன்களும், உஸ்மான் கானி 30 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 19.4 ஓவரில் 112 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஃப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இங்கிலாந்து அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய சாம் கர்ரான் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மார்க் வுட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.