இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன..? 1

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன..?

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இதனால், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. டி20 தொடரை வென்று இருந்த இந்திய அணி நிச்சயம் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றும் என்று நம்பியிருந்த நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன..? 2

மோசமான பேட்டிங் தொடக்கம்

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்கமே மந்தமாக இருந்தது. இந்திய அணி 12.5 ஓவரில் தான் 50 ரன்களை எட்டியது. அதாவது 77 பந்துகளில் 50 ரன் அடிக்கப்பட்டது. ரோகித் சர்மா சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததும் இதற்கு காரணம். 18 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா வெறும் 2 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியின் டேவிட் வில்லி மற்றும் மார்க் வுட் சிறப்பாக பந்துவீசினார்கள். ஷிகர் தவானும் முதல் 10 ஓவர்களில் ரன் குவிப்பில் ஈடுபடவில்லை. பின்னர் சுதாகரித்து பவுண்டரிகளை விளாசிய தவான் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

மீண்டும் மிடில் ஆடர் சொதப்பல்

 

ஷிகர் தவானும், விராட் கோலியும் களத்தில் இருந்தவரை இந்திய அணி 300 ரன்னிற்கு மேல் எடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. தவானும், கோலியும் ஆட்டமிழந்த பின்னர், ரன் குவிக்கும் பொறுப்பை மிடில் ஆடர் பேட்ஸ்மேன்களான ரெய்னா, பாண்ட்யா, தோனி கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மீண்டும் சொதப்பிவிட்டனர். இதில் ரெய்னா ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். பாண்ட்யா 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். தோனி 42 ரன்களை அடித்திருந்தாலும், முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்துவிட்டார். இந்த மூன்று பேரும் சற்று நேரம் நிலைத்து ஆடியிருந்தால் எளிதில் 300 ரன்களை எட்டியிருக்க முடியும். 30-40 ரன்கள் வரை இந்திய அணி குறைவாக எடுத்துவிட்டது. 257 ரன் இலக்கு என்பது மிகவும் குறைவானது.

 

இங்கிலாந்து அணியின் அற்புதமான பீல்டிங்

வழக்கமாக இந்திய அணியினர் மிகவும் அற்புதமாக களத்தில் பீல்டிங் செய்வார்கள். ஆனால், நேற்று இந்திய அணி பீல்டிங்கில் சொதப்பியது. நிறைய பவுண்டரிகளை தடுத்து இருக்கலாம். இதனால், நிறைய முறை விராட் கோலி டென்ஷன் ஆகிவிட்டார். அதேவேளையில் இங்கிலாந்து வீரர்கள் மிகவும் அற்புதமாக பீல்டிங் செய்தார்கள். மைதானத்தில் நாலாபுறமும் டைவ் அடித்து பந்தினை தடுத்தார்கள். இதனால், நிறைய பவுண்டரிகள் தடுக்கப்பட்டது. இதனால், சுமார் 20-30 ரன்கள் இந்திய அணியில் குறைக்கப்பட்டது. அது இறுதியில் இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது.

சோபிக்காத சுழற்பந்து வீச்சாளர்கள்

இந்திய அணி 256 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த போது சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சாஹல் ஏதேனும் மேஜிக் செய்து விக்கெட் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த இரண்டு போட்டிகளை காட்டிலும் நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. மொத்தமே இரண்டு விக்கெட் மட்டுமே வீழ்ந்தது. அதில் ஒன்று தோனி செய்த ரன் அவுட். கவுல் மட்டுமே ஒரு விக்கெட் வீழ்த்தினார். 20 ஓவர்கள் வீசியும் குல்தீப், சாஹல் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. எளிதில் அவர்களது பந்துகளை ரூட், மோர்கன் எதிர்கொண்டனர். சாஹல் 10 ஓவர்களில் 41 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. எடுத்த ஒரு விக்கெட்டும் நோ பால் என்பதால் பறிபோனது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *