டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல்; முதலிடத்தை இழந்தார் விராட் கோஹ்லி
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி.,யின் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி முதலிடத்தை இழந்துள்ளார்.
பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்டில் கோலி அபாரமாக ஆடியதால் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் கோலி முதலிடத்தை பிடித்தார். ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்மித் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இதற்கிடையே லார்ட்ஸ் டெஸ்டில் கேப்டன் கோலி சரிவர ஆடவில்லை. முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் முறையே 23, 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 107, மற்றும் 130 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா தோல்வியடைந்தது.
இதனால் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் தங்கள் இடங்களை இழந்து விட்டனர்.
கேப்டன் கோலி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். தடை காரணமாக விளையாடமல் உள்ள ஆஸி. ஸ்மித் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார்.
அஸ்வின் பேட்ஸ்மேன் வரிசையில் 67 ஆவது இடத்தில் இருந்து 57-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவும் 25 இடங்கள் முன்னேறி 75-ஆவது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது சிறப்பான பந்துவீச்சால் 900 புள்ளிகள் பெற்றுள்ளார். இயான் போத்தம் கடந்த 1980இல் 900 புள்ளிகளை கடந்திருந்தார். பந்துவீச்சாளர் தரவரிசையில் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடாவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ளார் ஆண்டர்சன்.
ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்ததால், பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர் என அனைத்து பிரிவுகளிலும் முன்னேறி உள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் 900 புள்ளிகளை கடந்துள்ள இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 900 புள்ளிகளை கடந்த ஏழாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும், கடந்த 38 வருடங்களில் 900 புள்ளிகளை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் ஒருசேர பெற்றுள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி நாட்டிக்காம் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.