இனி அமெரிக்காவிற்க்காக கிரிக்கெட் ஆடப்போகிறாரா உலகக்கோப்பை நாயகன்?! லாக்டவுனில் எடுத்த திடீர் முடிவு!
சொந்தநாட்டு அணியான இங்கிலாந்தில் போதுமான வாய்ப்பு கிடைக்காததால், உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் அமெரிக்க அணிக்காக ஆடவிருப்பதாக கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளங்கெட், இங்கிலாந்து அணிக்காக இதுவரை 13 டெஸ்டு போட்டிகள், 89 ஒருநாள் போட்டிகள் மற்றும் 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியிலும் இடம்பெற்றார். குறிப்பாக, 2019 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இங்கிலாந்து அணியின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் பிளங்கெட் பெயர் இல்லை. அடுத்த தொடர்களுக்காகப் பயிற்சிக்குத் 55 இங்கிலாந்து வீரர்கள் தேர்வாகியுள்ளார்கள்.
35 வயதான பிளங்கெட் இனி இங்கிலாந்து அணிக்கு ஆடுவது சந்தேகமென தெரிகிறது. ஆதலால், அவர் இனி அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு ஆடவிருப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும், அவரது மனைவியும் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பிளங்கெட் கூறுகையில், “உலகின் சிறந்த ஒருநாள் அணிக்காக விளையாட விருப்பப்படுகிறேன். இன்னும் என்னால் இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியும். உலகக் கோப்பை முடிந்தபிறகு அப்படியொன்றும் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. ஆனால், அணி நிர்வாகம் இளம் வீரர்கள் மீது கவனம் செலுத்துவாதாக தெரிகிறது.
அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். நல்ல உடல்தகுதியுடன் இருக்கின்றேன். ஆதலால் நான் ஏன் கிடைக்கும் வாய்ப்பை நழுவவிட வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஆடுவேன்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “என் குழந்தைகள் அமெரிக்கர்களாக இருப்பதால் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளேன் எனச் சொல்வதற்கு நன்றாக இருக்கும். நான் அங்குச் சென்று, அமெரிக்கக் குடிமகனாகி அல்லது கிரீன் கார்ட் பெற்று, அமெரிக்க கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவ முடியும்.” என்றார்.