எங்கள் தோல்விக்கு இது தான் காரணம்; புதிய காரணத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்
பிட்சுகள் ஆஸ்திரேலிய அணிக்கு சாதமாக இருந்ததே இங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணம் என ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
2001-க்குப் பிறகு ஆஷஸ் தொடரை இங்கிலாந்தில் கைப்பற்றும் நிலையில் 2-1 என்ற தொடரை இழக்க முடியாத இடத்துக்கு ஆஸி. சென்றதையடுத்து காயத்தினால் ஆஷசிலிருந்து விலகிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து பிட்ச்களை கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும் இந்தத் தொடரில் 671 ரன்களைக் குவித்த ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் குறித்தும் ஆச்சரியம் தெரிவித்தார்.
“பிட்ச்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக உள்ளன. பிட்ச்களில் இன்னும் கொஞ்சம் கூடுதல் புற்கள் தேவை. அப்படித்தான் இங்கு இயற்கையாகவே கிரிக்கெட் ஆடப்படுகின்றன. பிளாட் பிட்ச்கள் இங்கு வேலைக்குதவாது. வீரர்கள் பார்வையிலிருந்து இது ஒரு வெறுப்பூட்டும் விஷயம்தான்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றால் அங்கு பிட்ச்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாகவே அமைக்கப்படுகின்றன, ஆனால் இங்கு வரும் போதும் அவர்களுக்கு சாதகமாக பிட்ச்கள் தயாரிப்பதா? இது சரியானதாகப் படவில்லை.
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நல்ல பிட்ச்கள் அமைத்தனர், கிரீன் டாப் அமைத்தனர், இது இந்திய பவுலர்களை விட நமக்கு அதிக சாதகமாக அமைந்தது, அத்தகைய பிட்ச்களைத்தான் ஆஷஸ் தொடருக்கும் அமைத்திருக்க வேண்டும்.
ஆஸி.க்குச் செல்லுங்கள், இந்தியா, இலங்கை செல்லுங்கள் அங்கு அவர்களுக்குச் சாதகமாகவே பிட்ச்கள் அமைக்கின்றனர். நாம் மட்டும்தான் இந்த உள்நாட்டு சாதகங்களை பயன்படுத்துவதில்லை. நம் அணி சார்பாக பிட்ச்கள் அமைக்க வேண்டும்” என்றார் ஆண்டர்சன்.
ஒருவேளை ஆட முடியாமல் போட்டிகளை பார்வையாளனாகப் பார்க்கும் போது அவருக்கு இம்மாதிரி தோன்றியிருக்கலாம். ஏனெனில் இந்தத் தொடரில் அமைக்கப்பட்ட பிட்ச்கள் அனைத்துமே பவுலிங்குக்குச் சாதகமான பிட்ச்களே.