இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த முதல் கேப்டன் என்ற பெருமைக்குரிய இயன் மோர்கன் சர்வதேச போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்துள்ளார்.
என்னதான் கிரிக்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியது இங்கிலாந்தாக இருந்தாலும், இங்கிலாந்து அணியால் ஒரு முறை கூட உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. பல வருட போராட்டத்திற்கு பிறகு இங்கிலாந்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இங்கிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றதற்கு அந்த அணியின் கேப்டனான இயன் மோர்கன் தான் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக இயன் மோர்கன் திகழ்ந்து வந்தாலும், கடந்த இரு வருடத்திற்கும் மேலாக அவர் பேட்டிங்கில் மிக மோசமாகவே செயல்பட்டு வந்தார்.
என்னதான் இங்கிலாந்து அணி தொடர்ந்து வெற்றி பாதையில் பயணித்து வந்தாலும், இயன் மோர்கனின் மோசமான பேட்டிங் அவர் மீது கடுமையான விமர்ச்சனத்தை உருவாக்கியது. முன்னாள் வீரர்கள் பலரும் இயன் மோர்கனை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஜாஸ் பட்லர் அல்லது பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து அணியின் கேப்டனாக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டியிலும் இயன் மோர்கன் டக் அவுட்டாகி வெளியேறியதை தொடர்ந்து, முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பலரே இயன் மோர்கனை கடுமையாக சாடி பேசி வந்தனர்.
கடுமையான விமர்ச்சனங்கள் எழுந்ததால் இயன் மோர்கன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயன் மோர்கனோ மொத்தமாக சர்வதேச போட்டிகளில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இயன் மோர்கன் 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 7701 ரன்கள் குவித்துள்ளார். அதே போல் 115 டி.20 போட்டிகளில் விளையாடி அதில் 2458 ரன்கள் குவித்துள்ளார். 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 700 ரன்கள் குவித்துள்ளார்.