கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள இயன் மோர்கனாலும் கொல்கத்தா அணியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த தொடரில் கடுமையாக சொதப்பி வருகிறது. இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் பலர் அணியில் இருக்கும் நிலையிலும், கொல்கத்தா அணியால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு வெற்றி கூட பெற முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் கடுமையாக திணறி வருகிறது.

தொடர் தோல்விகளால் தினேஷ் கார்த்திக்கிடம் இருந்த கேப்டன் பதவி இயன் மோர்கனிடம் ஒப்படைக்கப்பட்டு விட்ட போதிலும் கொல்கத்தா அணியால் வெற்றி பாதைக்கு திரும்ப முடியவில்லை. கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் திடீரென விலகியது குறித்தும், இயன் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்தும் முன்னாள் வீரர்கள் பலரும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயன் மோர்கன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், இயன் மோர்கனாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.

இது குறித்து கவுதம் கம்பீர் கூறுகையில், “கிரிக்கெட் என்பது உறவு முறை கிடையாது, நமது செயல்பாடுகள் மற்றும் அர்பணிப்பு குறித்தானது. இயன் மோர்கனால் கொல்கத்தா அணியில் மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இந்த தொடரின் துவக்கத்திலேயே அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தால் கூட அணியில் மாற்றங்கள் செய்திருப்பார், ஆனால் தொடரில் பாதியில் இருந்து அவரால் என்ன செய்துவிட முடியும்” என்று தெரிவித்தார்.