உலகக்கோப்பையில் விளையாட ஆவலுடன் காத்திருக்கும் யுஸ்வேந்திர சாஹல்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு தான் ஆவலுடன் காத்திருப்பதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகின் வல்லரசை (சாம்பியன்) தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே மாத இறுதியில் துவங்க உள்ளது.
ஒருநாள் போட்டி தொடருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை வரும் மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான கிரிக்கெட் அணியை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக உலகக் கோப்பைக்கான இந்திய அணியை நேற்று அறிவித்தது.

இதில் அம்பத்தி ராயூடு, ரிஷப் பண்ட் போன்ற எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டாலும், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், விஜய் சங்கர் போன்ற வீரர்களுக்கு இடம்கிடைத்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் தங்களது கனவு நிறைவேறியுள்ளது குறித்து ஒவ்வொரு இளம் வீரர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வரும் நிலையில், தானும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட ஆவலுடன் காத்திருப்பதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து யுஸ்வேந்திர சாஹல் பேசியதாவது;
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட ஆவலுடன் காத்துள்ளேன் அதே வேளையில் என்னுடைய தற்போதைய கவனம் முழுவதும் ஐ.பி.எல் தொடரில் மட்டுமே உள்ளது. ஐ.பி.எல் தொடரில் நான் சார்ந்திருக்கும் அணிக்கான எனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டியதே எனது தற்போதைய கடமை” என்றார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி;
விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், கே.எல் ராகுல், தினேஷ் கார்த்திக்.