வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிற டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து போட்டிகளில் 3-1 என டி20 தொடரை கைப்பற்றி விட்டது. மேலும் இந்த போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஃபேபியன் ஆலன் டி20 தொடரில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்கு முன்னேறி விட்டார்.

இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று 3 விக்கெட்களை வீழ்த்தினார்மேலும் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினார். இதன் காரணமாக 16 இடங்கள் முன்னேறி நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மிட்சல் சட்னரை பின்னுக்குத்தள்ளி ஐசிசி தரவரிசை பட்டியலில் சிறந்த பந்துவீச்சாளர்களில் 10வது இடத்தில் உள்ளார்.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் செல்டன் காற்றெள் 2 இடங்கள் முன்னேறி 22வது இடத்திலும், டுவைன் பிராவோ 7 இடங்கள் முன்னேறி 37 வது இடத்திலும் மற்றும் ஒபத் மிக்காய் 15 இடங்கள் முன்னேறி 38வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆஸ்திரேலிய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.இவர் முதல் இரண்டு போட்டிகளில் எந்த ஒரு விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. பின் மூன்றாவது போட்டியில் மட்டும் ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் இதன் காரணமாக இவர் ஐசிசி தரவரிசை பட்டியலில் 29வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் ஐசிசி தரவரிசை பட்டியல் நம்பர் 1 பேட்ஸ்மேன்

சமீபமாக நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 3-0 என தோல்வியை தழுவியது. இருந்தாலும் பாகிஸ்தான் அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் பாபர் அசாம் ஐசிசி சிறந்த பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடிய பாபர் அசாம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் தொடரில் சதமடித்து சாதனை படைத்தார் இதன் காரணமாகவே இவர் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.