காயம் குறித்தும், மீண்டும் இந்திய அணிக்கு விரைவில் திரும்ப அவசரம் காட்டுறேனா? என்பது குறித்தும் மனம் திறந்துள்ளார் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா.
இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா தென்னாபிரிக்க தொடருக்கு பிறகு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக லண்டனில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், இவரது இடத்திற்கு புதிய ஆல்ரவுண்டர் சிவம் துபே இந்திய அணியில் எடுக்கப்பட்டார். இவர் முதன்முதலாக வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்று அசத்தினார். குறிப்பாக இரண்டாவது போட்டியில் இவர் எடுத்த 3 விக்கெட்டுகள் வெற்றிக்கு காரணமாக அமைந்தன.
தற்போது நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் 3 வீரராக களமிறக்கப்பட்டார் டுபே. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு அரைசதம் கண்டார். இதனால் இவரின் இடம் அடுத்ததடுத்த தொடரில் உண்டு என கூறப்படுகிறது.
டுபே இப்படியே நன்றாக ஆடிவந்தால் ஹர்டிக் பாண்டியா இடம் காலியாகிவிடுமோ என்ற பயத்தில் பாண்டியா விரைவாக குணமாக முயற்சிக்கிறார் என கூறப்படுகிறது.
இது குறித்து மனம் திறந்துள்ள பாண்டியா கூறுகையில்,
“உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தற்போது மிகவும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். காயத்தில் இருந்து மீண்டும் வருவதற்கான வேலை மிகவும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.
யாருக்காகவும் நான் விரைவில் குணமடைய வேண்டும் என நினைக்கவில்லை. மனதளவில் திடமாக இருப்பதால், நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எந்தவொரு வீரரும் தனது நாட்டிற்காக ஆடும்முன் தன்னைத்தானே சரியான வீரனா? என்பதை பரிசோதிப்பர்.
நாடும் அதேபோல தான். நான் முழுமை அடைந்துவிட்டதாக உணர்ந்த பின்பே அணிக்கு திரும்புவேன். நான் என்னை நிரூபித்தால் என்னை அணியில் எடுப்பர் என்றார்.