கொல்கத்தாவின் இளவரசர் என்ற செல்லப்பெயருடன் இருந்து தற்போது இந்திய கிரிக்கெட்டின் “தாதா“வாக வலம் வரும் சவுரவ் கங்குலி இன்று பிறந்தநாள் காண்கிறார். இந்திய கிரிக்கெட்டின் மரபுகளை தயங்காமல் தகர்த்தவர். ஆஃப் சைடில் அசுரன், இமாலய சிக்ஸர்களின் எந்திரன். இந்திய அணியின் இயல்பை மாற்றியவர், இயல்பிலேயே ஆளுமை பண்பு நிறைந்தவர்.
1992-ம் ஆண்டு இந்திய அணி அசாருதீன் தலைமையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். கபில்தேவ், ஸ்ரீகாந்த் போன்றோருடன் தனது 19-வது வயதில் ஆடிய அந்த போட்டியில் 3 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
அத்தொடரின்போது சீனியர் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டுசெல்ல மறுத்து, தான் கிரிக்கெட் ஆடத்தான் இங்கு வந்தேன் என கங்குலி கூறியதாக சொல்வது உண்டு. அத்தொடருடன் கழற்றிவிடப்பட்டு 4 ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் வாய்ப்பு பெற்றார். லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அடித்த சதமும், அதன் பிறகு நடந்ததும் வரலாறு.
டெண்டுல்கர் தலைமையில் வென்ற டைடன் கோப்பை ஒருநாள் தொடரில் துவக்க வீரராக ஏற்றம் பெற்றார். உலகின் தலைசிறந்த துவக்க ஜோடியாக சச்சினுடன் இணைந்து 136 இன்னிங்ஸ்களில் 6609 ரன்கள் குவித்தது இன்றளவும் யாரும் நெருங்க முடியாத சாதனையாக உள்ளது. சஹாரா கோப்பையில் எடுத்த ஆல்ரவுண்டர் அவதாரமாகட்டும், ஸ்ரீநாத்துடன் இணைந்து பந்துவீச்சை துவக்கியதாகட்டும், 7 பீல்டர்களை நிறுத்தினாலும் ஆஃப் சைடுகளில் விளாசிய பவுண்டரிகளும், கிரீஸிலிருந்து இறங்கிவந்து தூக்கும் இமாலய சிக்ஸர்களும் கடந்த நூற்றாண்டின் இறுதியில் கிரிக்கெட் பார்த்த யாருடைய நினைவுகளிலிருந்தும் அகலாதவை.
கேப்டனாக இருந்தபோது வழக்கமாக கடைபிடிக்கப்படும் மரபுகளை மாற்றி துணிச்சலான முடிவுகளை அமல்படுத்துவதில் அவர் காட்டிய உறுதி அனைவரும் அறிந்ததே.
ஸ்பெஷலிஸ்ட் விக்கெட்கீப்பரான நயன் மோங்கியாவை நீக்கிவிட்டு சபாகரீம் போன்ற பேட்டிங் செய்யும் விக்கெட் கீப்பர்களை பரிசோதித்து அம்முயற்சியில் வெற்றி கிடைக்காததால், பேட்டிங் மட்டும் செய்து கொண்டிருந்த டிராவிட்டை கீப்பிங் செய்ய வைத்தார்.
நிபுணர்கள் சேவாக்கின் கால்நகர்த்தல்களை குறைசொல்லி டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தகுதியானவரல்ல என்று கூறிக்கொண்டிருந்தபோது, அவரை துவக்க வீரராக களமிறக்கி டெஸ்டுகளின் சுவாரஸ்யத்தை கூட்டினார். யுவராஜ்சிங்கையும் மற்றொரு தொடக்கவீரராக இறக்க அவர் திட்டமிட்டது மட்டும் நடந்திருந்தால் டெஸ்ட் போட்டிகளின் தோற்றம் மாறியிருக்கும். தோனியை ஒன் டவுனில் பேட்டிங் செய்ய வைத்ததும் இதில் குறிப்பிடத்தக்கது. டாஸ் போடும் அதிகாரம் மட்டும் இருந்த இந்திய கேப்டன்களுக்குரிய முகத்தை சர்வதேச அரங்கில் மாற்றியவர். ஸ்டீவ் வாக்கிற்கு இவர் கொடுத்த “ஷட்அப்” பதில் இங்கு நினைவு கூறத்தக்கது.
Many more happy returns of the day @SGanguly99 . May you taste ever more success and receive more and more love. Have a great day and year ahead #HappyBirthdayDada pic.twitter.com/j53UUDerJE
— VVS Laxman (@VVSLaxman281) July 8, 2020
Leader of Men.
God of off-side.
Fighter.
Happy Birthday, Dada. ?? #HappyBirthdayDada pic.twitter.com/PJcy0xwgyb— Aakash Chopra (@cricketaakash) July 8, 2020