சச்சின் அந்தவொரு ரெக்கார்டை முறியடிக்க இவரால் மட்டுமே முடியும்… அது ரோகித் சர்மா இல்லை; முன்னாள் வீரர் கணிப்பு!
சச்சின் 100 சதங்கள் சாதனையை இந்திய அணியில் இவரால் மட்டுமே முறியடிக்க முடியும் என தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக்.
1989ஆம் ஆண்டு இந்திய அணியில் தனது 16வது வயதில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், இளம் வயதிலிருந்தே தனது அசாத்திய பேட்டிங் திறமையால் கிரிக்கெட் உலகில் தனக்கென தனி சகாப்தத்தையே உருவாக்கினார், குறிப்பாக, இவர் படைத்த சாதனைகள் ஏராளம்.
ஒருநாள் போட்டிகளில் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் என இரண்டிலும் அதிக ரன்கள் அடித்தவர் சச்சின் டெண்டுல்கர். இரண்டிலும் அதிக சதங்கள் இவருடையது தான். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 100 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ரிக்கி பாண்டிங் 71 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும், விராட்கோலி 70 சதங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இந்நிலையில், சச்சினின் ஏறக்குறைய முறியடிக்க முடியாத இந்த 100 சதங்கள் சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நிச்சயம் விரைவில் முறியடிப்பார் என தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக்.
பிராட் ஹாக் வெளியிட்ட கருத்தில், “முந்தைய காலத்தில் வீரர்களுக்கு உடல்தகுதி குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவு. ஆதலால் காயம் காரணமாக நிறைய போட்டிகளை தவறவிட நேர்ந்தது. ஆனால், தற்போது அணியில் உடல்தகுதியை கவனித்துக்கொள்ள தனியாக மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி உடல்தகுதியில் முழுக்கவனம் செலுத்துகிறார். இதனால், அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கிறார். 3 வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுகிறார். பல சாதனைகளை தொடர்ச்சியாக முறியடிக்கிறார்.
விரைவில், சச்சினின் 100 சதங்கள் சாதனையை இவரலால் முறியடிக்க இயலும் என நினைக்கிறேன். அதற்க்கு முழு தகுதியும் இவரிடம் உள்ளது. நாளுக்கு நாள் இவரின் ஆட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறார்.” என குறிப்பிட்டிருந்தார்.