இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சொந்தமாக முடிவு எடுக்காமல், யார் என்ன சொன்னாலும் தலையாட்டிக்கொண்டே இருக்கிறார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர் தவான் காயம் ஏற்பட்ட போது, அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் எடுக்கப்பட்டார். அதன்பின்பு 4வது இடத்திற்கு எடுக்கப்பட்ட விஜய்சங்கர் காயம் ஏற்பட்டு வெளியேறிய போது, ரிசர்வ் வரிசையில் இல்லாத வீரரான மயங்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார்.
ரிசர்வ் வரிசையில் முதலாவதாக இருக்கும் அம்பத்தி ராயுடுவை இருமுறையும் எடுக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ரிசர்வ் வரிசையில் இல்லாத ஒருவரை உலகக்கோப்பை அணியில் எடுத்தது ஏன்? என அணியின் தேர்வுக்குழுவினை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்தனர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கு செல்லும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட போது பேசிய இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் கூறுகையில், “உலக கோப்பை தொடரில் வீரர்கள் காயம் ஏற்பட்டு வெளியேறிய போது, இந்திய அணி நிர்வாகத்தின் கோரிக்கையின்படி மாற்றுவீரர்கள் அறிவிக்கப்பட்டது. ராயுடு அணியில் எடுக்கப்படாமல் போனதற்கு எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் காரணம் இல்லை. இந்திய அணி என்ன நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு விமர்சனங்களை முன்வையுங்கள்” என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் பேசுகையில், “இந்திய அணியின் நிர்வாகம் என்ன கோரிக்கை வைத்தாலும் அதனை பரிசீலனை செய்யாமல் வெறுமனே தலையாட்டிக்கொண்டு கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். அணியின் தேவை என்ன என்பதை புரிந்துகொண்டு செயல்பட்டிருக்க வேண்டும்” என தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத்தின் பதிலை கடுமையாக விமர்சித்துள்ளார்.