அஸ்வினால் இந்திய அணியையும் சிறப்பாக வழிநடத்த முடியும்; முன்னாள் பயிற்சியாளர் சொல்கிறார்
ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் அஸ்வினால் இந்திய அணியையும் வெற்றி பாதையில் சிறப்பாக வழிநடத்த முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜோ டேவிஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடருக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக வீரர் ரவிசந்திர அஸ்வின் பஞ்சாப் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில் பஞ்சாப் அணியை சிறப்பாக வழிநடத்தும் அஸ்வினால் இந்திய அணியையும் சிறப்பாக வழிநடத்த முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த ஜோ டேவிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜோ டேவிஸ் கூறியதாவது, “ஒரு கேப்டனாக அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரால் சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியையும் சிறப்பாக வழிநடத்த முடியும் என்று நம்புகிறேன். அவரிடம் சிறந்த கிரிக்கெட் மூளை உள்ளது, அவரால் ஒரு அணியை சிறப்ப்பாக வழிநடத்த முடியும். அணியில் புதிய புதிய மாற்றங்கள் மற்றும் செய்யும் அவரது அனுகுமுறை சிறப்பாக உள்ளது, அவரது விளையாட்டில் ஒரு தனித்துவம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதே போல் அஸ்வினின் கேப்டன்சி குறித்து ஆரோன் பின்ச் கூறியதாவது, “அஸ்வினின் தலைமையின் கீழ் விளையாடுவது சிறந்த அனுபவமாகும். சுழற்பந்து வீரரான அவர் அணியை குழுவாக அமைத்து ஊக்குவிப்பதில் அபாரமாக செயல்படுகிறார்.

இக்கட்டான நேரத்தில் அவர் சரியான முறையில் கையாள்கிறார். அவர் அமைதியான முறையில் திட்டத்தை செயல்படுத்துகிறார். இதை அவர் டோனியிடம் இருந்து தவிர வேறு யாரிடமும் கற்று இருக்க முடியாது. கேப்டன் பதவியில் டோனியின் நிழலாக அஸ்வின் உள்ளார்.
கேப்டன் பதவியில் அவர் சிறப்பாக செயல்படுகிறார். இந்த பதவியில் அவருக்கு அனுபவம் குறைவாக இருந்தாலும் சரியான முடிவுகளை எடுக்கிறார். வெற்றிகரமான கிரிக்கெட் வீரரான அவரது முடிவுக்கு டோனியின் செயல்பாடே காரணமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.