கோரோனாவால் உயிரிழந்த முன்னாள் இந்திய வீரர்! அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!
கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டு வந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
73 வயதான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சௌஹான்-க்கு கடந்த மாதம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை முடிந்தபின் மீண்டும் வீட்டிற்கு திரும்பினார்.
அதன்பிறகு கடந்த வாரம் இவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேத்தனுக்கு சிறுநீரக கோளாறு இருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் இவருக்கு சுவாச பிரச்சனையும் ஏற்பட்டு வெண்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.
சுமார் 60 சதவீதத்திற்கும் மேலான ஆக்சிஜன் செயற்கை சுவாசக் குழாய் மூலமாகவே செலுத்தப்பட்டு வந்தது. நாளுக்கு நாள் இவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறிக் கொண்டே இருந்த நிலையில் நேற்றைய தினம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என மருத்துவக் குழு தெரிவித்தது.
அதற்கேற்றார்போல் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். முதலில் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேத்தன், பின்னர் உயர் சிகிச்சைக்காக அரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இந்திய அணிக்காக 1980 களில் விளையாடியிருக்கிறார். இவர் சுமார் 50க்கும் மேற்பட்ட இன்னிங்சில் சுனில் கவாஸ்கர் உடன் துவங்கியிருக்கிறார். இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளிலும் 7 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்திருக்கிறார்.
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர் பாஜகவில் இணைந்து தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இவர் அமைச்சராகவும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.