தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரானது, இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்குமே சவால் அளிப்பதாக இருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் நிக் போத்தாஸ் கூறினார்.
இந்தியா வந்த இலங்கை அணி, தலா 3 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியுடன் மோதியது. அந்தத் தொடர்கள் அனைத்தையும் இந்தியா கைப்பற்றிய நிலையில், ஒற்றை ஒருநாள் ஆட்டத்தில் மட்டும் இலங்கை வென்றது.
இந்நிலையில், கடைசி டி20 ஆட்டத்துக்குப் பிறகு பேசிய இலங்கை பயிற்சியாளர் நிக் போத்தாஸ் கூறியதாவது:
தென் ஆப்பிரிக்கா போன்ற ஒரு அணிக்கு எதிராக விளையாடும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய அனைத்து பகுதிகளிலும் இந்தியா தயார் நிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் புற்கள் நிறைந்த ஆடுகளமாக இருக்கும் பட்சத்தில், பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்டிங்லை னுக்கு சவால் அளிக்கும் இந்தியா.
Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS
அதுவே, சமதள ஆடுகளமாகவோ, சூழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் அதற்குத் தயார் நிலையிலும் இந்தியா உள்ளது. இந்திய பேட்டிங் லைன் ரன்களை குவிக்கும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்க அணிக்கு அது மிகுந்த சவாலாக இருக்கும்.
இலங்கைக்கு எதிரான தொடரில் ஒருநாள் ஆட்டங்களில் இந்தியா பலம் வாய்ந்ததாக இருந்தது. கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய அணியில் மேற்கொண்ட மாற்றம் அவர்களின் ஆட்டத்தை பாதிக்கவில்லை. ஆட்டத்தை முடித்து வைப்பதில் உலகிலேயே சிறந்த வீரர் தோனி தான்.
ஆனால், கடைசி டி20 ஆட்டத்தில் பாண்டியாவுக்கு அதுபோன்ற ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. மூத்த வீரர்களிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக் கொள்ள இளம் வீரர்களை கட்டமைக்கும் வகையில் இவ்வாறு அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இந்திய அணியிடம் இருந்து கற்பதற்கு அதிகம் உள்ளது.
இந்திய அணியில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு சவாலாக இருப்பார்கள். அதேபோல், அவர்கள் அணியில் இம்ரான் தாஹிரும் பதிலடி கொடுக்கலாம். ஒருநாள் தொடரில் இவர்களே தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள் என்றார் நிக் போத்தாஸ்.