காம்பீரை நீக்கியதற்கு காரணம் என்ன..? உண்மையை உடைத்த ஸ்ரேயஸ் ஐயர்
ஐ.பி.எல் டி.20 தொடரில் டெல்லி – கொல்கத்தா இடையேயான நேற்றைய போட்டியில் காம்பீர் நீக்கப்பட்டது ஏன் என்ற காரணத்தை டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவிற்கு மத்தியில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியும் கொல்கத்தா அணியும் மோதின.
டெல்லி அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று தனது கேப்டன் பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்த கவுதம் காம்பீர், இந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டது டெல்லி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நேற்றைய போட்டியில் டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தாலும், காம்பீரை நீக்கியதற்காக டெல்லி ரசிகர்களே டெல்லி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் கொல்கத்தா அணியுடனான நேற்றைய போட்டியில் கவுதம் காம்பீர் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது குறித்து ஸ்ரேயஸ் ஐயர் கூறியதாவது, “கம்பீர் போட்டியில் விளையாடாததற்கு நான் காரணமில்லை. தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது அவரின் உயரிய மனதை காட்டுகிறது. அதே சமயம் தான் இந்த போட்டியிலிருந்து விளையாடாமல் வெளியே உட்கார்ந்தது அவரின் தைரியத்தை காட்டுகிறது. இது அவரின் சொந்த முடிவு, யாரும் அவரை கட்டாயப்படுத்தவில்லை. அவர் மீண்டு வந்து போட்டியில் பங்கேற்பார்.” என தெரிவித்தார்.
அதே போல் அவரது இடத்தில் களமிறங்கிய முன்ரோ எங்கள் அணிக்கு சிறப்பான துவக்கம் கொடுத்தார். ப்ரிதீவ் ஷாவும் அபாரமாக செயல்பட்டார், கொல்கத்தா அணிக்கு கடின இலக்கை நிர்ணயிக்க அவரது பேட்டிங் உறுதுணையாக இருந்தது. ஒரு கேப்டனாக முதல் வெற்றியை பெற்றுள்ளது புதிய உத்வேகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.