மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கங்குலி ; மருத்துவர்கள் விளக்கம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மற்றும் தற்போதைய பிசிசிஐயின் தலைவரான கங்குலி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2ம் தேதி கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கங்குலியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் 3 இடத்தில் அடைப்புகள் இருப்பதை கண்டறிந்தனர். இதன் காரணமாக கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் ஒரு இடத்தில் 90 சதவீதம் அடைப்பு இருந்துள்ளது. இது மிகவும் மோசமான நிலை என்பதால் உடனடியாக ஒரு ஸ்டன்ட் பொருத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு வாரங்களில் மருத்துவர்கள் மீதமுள்ள இரண்டு ஸ்டண்ட்களை பொருத்த திட்டமிட்டுள்ளனர்.

இதன்பிறகு கங்குலி மருத்துவமனையில் ஒரு வார காலம் சிகிச்சை பெற்ற பிறகே வீடு திரும்பினார். வீடு திரும்பிய கங்குலி வழக்கம்போல் தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார்.
ஆனால் தற்போது கடந்த புதன்கிழமையன்று கங்குலி மீண்டும் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. கங்குலி திடீரென்று மருத்துவமனைக்கு வந்தது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர். அவர்கள் முதலில் கூறியதில் கங்குலி வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு நேரில் வந்ததாக கூறினர்.

இதன் பிறகு கூறிய மருத்துவர்கள் மீண்டும் கங்குலிக்கு இரண்டாவது முறையாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக கூறியிருக்கின்றனர். தற்போது மீதமிருக்கும் இரண்டு ஸ்டென்ட்களை பொருத்துவதற்காகவே மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்ததாகவும் இதுகுறித்து பயப்பட தேவையில்லை என்றும் மருத்துவர்கள் அதிகாரபூர்வமாக கூறியிருக்கின்றனர்.
கங்குலி இம்மாதத்தின் தொடக்கத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவர்களின் இந்த அதிகாரப்பூர்வ தகவல் மூலம் ரசிகர்கள் தற்போது நிம்மதியாக இருக்கின்றனர்.