ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு இந்த இளம்வீரரை கேப்டனாக நியமித்தால் சிறந்தது என சர்ச்சையான கருத்துடன் வந்துள்ளார் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர்.
ஐபிஎல் டி20 லீக் தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. கேகேஆர் அணி 2012 மற்றும் 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டு முறையும் கொல்கத்தா அணிக்கு கவுதம் காம்பிர் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து இரு மோசமான சீசன் காரணமாக 2018ஆம் ஆண்டு காம்பிர் கொல்கத்தா அணியில் இருந்து நீக்கப்பட்டு, டெல்லி அணிக்குச் சென்றார். இதனால் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2019 சீசனில் கொல்கத்தா அணியின் வீரர்கள் மத்தியில் குழப்பங்கள் இருந்தது.
இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு, வரும் ஐபிஎல் தொடரில் இளம் வீரரான ஷுப்மான் கில்லை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கவுதம் காம்பிர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில், “என்னைப் பொறுத்த வரையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் பதவிக்கு சரியான வீரர்கள் இல்லை. இதனால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து ஷுப்மான் கில்லுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்க நான் ஆதரவாக இருப்பேன்.
தினேஷ் கார்த்திக் இன்னும் இரண்டு வருடங்கள் அணியில் விளையாடலாம். ஆனால், கேப்டன் பொறுப்பில் எதிர்பார்த்த அளவிற்கு அவர் சிறப்பாக விளையாடவில்லை. ஷுப்மான் கில் போன்ற இளம் வீரருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பளிக்க வேண்டும். அவரால் புதிய திட்டங்கள் மூலம் நல்ல முடிவுகளை கொடுக்க முடியும்” என்றார்.