சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்காவிற்கு காம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்து தனக்கென பெரும் ரசிகர் படையை பெற்றிருக்கும் குட்டி தல சுரேஷ் ரெய்னா சமீப காலமாக தனது மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார்.
உள்ளூர் கிரிக்கெட் தொடர்களான ரஞ்சி டிராபி மற்றும் சையத் முஸ்தாக் அலி டிராபி உள்ளிட்ட தொடர்களில் கூட ரெய்னா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தன்னை நிரூபிக்க முடியாமல் தவித்து வருவதால், இனி அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவதே சிரமம் என்ற நிலையே உள்ளது.
தனக்கான கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியானாலும், சுரேஷ் ரெய்னா பல்வேறு சமூக பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்.
சுரேஷ் ரெய்னாவை விட அவரது மனைவி ப்ரியங்கா ரெய்னா அதிகமான சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
சமீபத்தில் தங்களது மகளான கிரேஸின் பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கிய ரெய்னா தம்பதி அதன் மூலம் தற்போது பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் ரெய்னாவின் மனைவி, தற்போது ரெட் வானொலியுடன் இணைந்து வாரந்தோறும் அந்த எஃப்.ம் மூலம் சமூக கருத்துகளை முன்னிறுத்தி வருகிறார். மேலும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலம் ஏழை எளிய மக்களின் அன்றாட உணவு தேவையை தீர்த்து வைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
பிரியங்கா ரெய்னாவின் சமூக சேவைகளுக்கு, விளையாட்டு பிரபலங்களான சாய்னா நெஹ்வால், விரேந்திர சேவாக், முகமது கைஃப் உள்ளிட்டவர்களும் உதவி செய்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான கவுதம் காம்பீர் ப்ரியங்காவிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காம்பீர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் “ஒரு பெண் சமூக சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. ரெய்னா மனைவியின் சமூக சேவைகளுக்கும், அவரது வானொலி நிகழ்ச்சிக்கும் என்னுடன் சேர்ந்து நீங்களும் பாராட்டு தெரிவியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
காம்பீரின் இந்த ட்வீட்டை பார்த்த சுரெஷ் ரெய்னா உடனடியாக காம்பீருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் காம்பீர் பவுண்டேஷன் என்ற பெயரில் காம்பீர் செய்து வரும் சேவைகளுக்கும் ரெய்னா தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.