தோனியை விட இவர் தான் சிறந்த கேப்டன்; தேவை இல்லாமல் சீண்டி பார்க்கும் கவுதம் கம்பீர்
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் மிகச்சிறந்த கேப்டன் யார் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காம்பீர் கூறுகையில், “ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகச்சிறந்த கேப்டன் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. அவரின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 முறை கோப்பை வென்றுள்ளது. கோப்பை வெல்வது தான் ஒரு வெற்றிகரமான கேப்டனுக்கு அழகு. இதோடு மட்டுமல்ல, ஐபிஎல் அரங்கில் அதிக கோப்பை வென்ற கேப்டன் என்ற வரலாறும் ரோஹித் படைப்பார்.

ஏற்கனவே ரோஹித் 4 கோப்பைகள் வென்றுள்ளார். ரோஹித் விடைபெறும் போது 6 அல்லது 7 கோப்பைகள் மும்பை அணிக்காக வாங்கி கொடுத்திருப்பார்” என்றார். இதே போல இந்திய பயிற்சியாளர் சஞ்ஜய் பாங்கர் கூறுகையில்,“மும்பை இந்தியன்ஸ் அணியின் பல நெருக்கமான போட்டிகளை பார்த்தாலே கேப்டனாக ரோஹித் சர்மாவின் வெற்றியை பார்க்க முடியும்.

நெருக்கடியான நேரத்தில் ரோஹித் எடுக்கும் முடிவுகள் சிறப்பானது. தோனி முடிவுகளை நோக்கி செல்லக்கூடியவர். ஆனால் கேப்டன் பொறுப்பு ஏற்ப முடிவுகள், நுணுக்கமான செயல்பாடுகள் இவைகளை வைத்துப்பார்க்கும் போது சிறந்த கேப்டன் ரோஹித் சர்மா தான்” என்றார். இதே போல வர்ணனையாளர் டேனி மோரிசன் கூறுகையில் , “கேப்டன் பொறுப்பில் உள்ள உத்வேகத்தை வைத்து பார்க்கிறேன். அதில் சிறந்தவர் தோனி. இந்திய அணிக்காக தோனி விளையாடும் போது அதே உத்வேகத்துடன் தான் இருப்பார். குறிப்பாக நெருக்கடி நேரங்களை தோனி போல வேற யாரும் கையாள முடியாது” என்றார்.