ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
துவக்க வீரர் விருதிமான் சாகா 4 ரன்களுக்கு வித்தியாசமான முறையில் கேட்ச் பிடிபட்டு ஆட்டம் இழந்தார். அதன்பிறகு உள்ளே வந்து விளையாடிய சாய் சுதர்சன் துரதிஷ்டவசமாக 20 ரன்களில் இருந்தபோது ரன் அவுட் மூலம் வெளியேறினார்.
பின்னர் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்து விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டனர். நன்றாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா 19 பந்துகளில் 28 ரன்கள் அடித்து அவுட் ஆனதும், 91 ரன்களுக்கு குஜராத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அடுத்ததாக உள்ளே வந்த டேவிட் மில்லர், சுப்மன் கில் உடன் பாட்னர்ஷிப் அமைத்தார். சிறப்பாக விளையாடி வந்த கில் 34 பந்துகளில் 45 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இதில் ஒரு சிக்ஸ் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து களமிறங்கி வானவேடிக்கை காட்டிய இளம் வீரர் அபிநவ் மனோகர் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை அடித்துக்கொடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். இவர் 13 பந்துகளில் 27 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.
சிறப்பாக விளையாடி வந்த டேவிட் மில்லர் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 30 பந்துகளில் 46 ரன்கள் அடித்திருந்தபோது ஆட்டம் இழந்தார். இதில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடங்கும். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 177 ரன்கள் அடித்தது குஜராத் அணி.
அகமதாபாத் மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக இருப்பதால், 178 ரன்கள் இலக்கை எட்டி பலம்மிக்க குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.